Thursday, December 24, 2015

கதை அல்ல நிஜம்...


அமெரிக்காவில் பிராஜெக்ட் மேலாளராய் வேலை செய்யும் ஒருவருக்கு  திருமணம் நடந்து, ஒரு வயதில் ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது.
கணவன்,மனைவி..தங்கள் குழந்தையுடன்  சென்னை வந்தனர்.

அவர்களை வரவேற்க வந்த இரு வீட்டாரும், குழந்தையை வாங்கி கொஞ்சினர்.பின்னர் மந்தைவெளியில் உள்ள தன் வீட்டிற்குச் செல்ல இஞ்சினீயர் கிளம்பினார்.ஆனால் மனைவியோ தனது வீட்டிற்கே முதலில் போக வேண்டும் என்றார்.இதில் இரு தரப்பிற்கும் தகராறு ஏற்பட்டது.

உடன் பெண்ணின் தந்தை, 'மகளையும், பேரனையும் நான்தான் அழைத்துச் செல்வேன்..நீங்கள் எங்களுடன் வருவதானால் வாருங்கள் அல்லது நீங்கள் மட்டும் உங்கள் வீட்டிற்குச் செல்லுங்கள்' என்று கூறி மகளையும், பேரனையும் காரில் அழைத்துச் சென்றார்.

இதனால் ஆத்திரம் அடைந்த கணவர், விமான நிலைய போலீசிற்குச் சென்று, 'மனைவியும், மகனும் மாயமாகி விட்டனர்.அவர்களை கண்டுபிடித்து தாருங்கள்' எனப் புகார் கொடுத்தார்.போலீஸ் விசாரணையில் பெண்ணின் தந்தையே பெண்ணை அழைத்துச் சென்றது தெரிய வந்தது.

இதை அடுத்து அவர்களை போலீசார் சமாதானப்படுத்தியதோடு, 'இரு வீட்டாரையும் ஈகோவை விட்டு அனுசரித்துச் செல்ல அறிவுறுத்தினர்.மனைவியின் விருப்பப்படி அவருடன் சேலம் சென்று இரு நாட்கள் இருந்துவிட்டு பின்னர் மனைவியை அழைத்துக் கொண்டு உங்கள் வீட்டிற்கு செல்லுங்கள்'என்றனர்.

இச் செய்தி ஒரு செய்தியா என்று சிலர் நினைக்கக் கூடும்..ஆனால் எனக்கு இது முக்கியச் செய்தி ஆகப் பட்டது.

பெண்கள் கணவன் வீட்டிற்குத்தான் முதலிடம் தர வேண்டும் என்று குறுகிய நோக்கம் இருந்த காலம் எல்லாம் போய் விட்டது.திருமணமானதும்..பெண்களின் பிறந்தவீடு உறவு முடிந்துவிட்டது..இனி புகுந்த வீடுதான் என்பதெல்லாம்..பழங்கதை.பிள்ளையைப் பெற்றோர்..தன் மகன் என எண்ணுவதைப்போல..பெண்ணைப் பெற்றோருக்கும்..அப்பெண் அவர்கள் வீட்டுக் குழந்தை..பெற்றோரால் பார்த்துப் பார்த்து வளர்க்கப்பட்டவள்..ஒவ்வொரு வயதிற்கும்..ஒவ்வொரு வித அலங்காரம் பண்ணி குழந்தை வளர்ச்சியை ரசித்தவர்கள்.அவளுக்கு பையனுக்கு இணையாகக் கல்வியறிவை ஊட்டியவர்கள்.எந்த அளவிலும்..பெண்ணைப் பெற்றோர்..பிள்ளையைப் பெற்றொரைவிடக் குறைந்தவர்கள் அல்ல..அதே போல பிள்ளையின் மீது நீங்கள் எவ்வளவு பாசம் வைத்திருக்கிறீர்களோ..அதில் எள்ளளவு பாசமும் குறையாமல் பெண் மீது பாசம் வைத்துள்ளவர்கள் அவர்கள்.

ஆகவே..வயதில் பெரியவர்களான பெற்றோர்கள்..இன்றைய காலகட்டத்தைப் புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல நடந்து கொள்ளுங்கள்.

நான் மேலே சொன்ன செய்தியில், கணவனும் சரி,பிள்ளையைப் பெற்றோரும் சரி...நீண்ட நாட்களுக்குப் பிறகு வருகிறாய்..முதலில் உன் வீட்டிற்குச் சென்று உன் பெற்றோருடன் சில நாட்கள் இருந்து விட்டு வா..என்று சொல்லியிருந்தால்..அந்தப் பெண்ணும் மகிழ்ந்திருப்பாள்..தனது மாமியார்,மாமனார் மீது நல்ல எண்ணமும் உருவாகி இருக்கும்...திட்டமிட்டப்படி இல்லாமல் விரைவில் தன் பெற்றோர் வீட்டிலிருந்து கிளம்பியிருப்பாள்.

மேலும் பெண்ணின் தந்தையும் சற்று விட்டுக் கொடுத்து தன் பெண்ணிடம்..'நீ அவர்கள் வீட்டில் இரண்டு நாள் இருந்துவிட்டு கணவன், குழந்தையை அழைத்துக் கொண்டு நம் வீட்டிற்கு வந்து சில நாள் தங்கலாம்' என்று அறிவுறுத்தி இருக்கலாம்.

மொத்தத்தில் இப்போதைய தேவை..புரிந்துணர்வும்..விட்டுக் கொடுத்தலுமே...இதை அனைவரும் புரிந்து கொண்டால்..பிரச்னை இல்லை.


வயதானவர்கள் தங்கள் பிடிவாதத்தால்...ஒரு அருமையான உறவுகளிடையே கடைசிவரை ஒரு பிளவு ஏற்பட்டு விட்டதை ஏன் உணர மறுக்கிறார்கள்.

கணவனானாலும் சரி..மனைவியானாலும் சரி..அவர்களுக்கான முடிவுகளை அவர்களே எடுத்துக் கொள்ள வேண்டிய வயதை அடைந்து விட்டனர்..அவர்களுக்குள் பேசி முடிவெடுக்கட்டும்.இடையே ..இரு தரப்பு பெற்றோரும் தங்கள் எல்லையை உணர்ந்து..அத்துடன் நிற்க வேண்டும்.

இன்னமும் சென்ற நூற்றாண்டிலேயே இருப்பதில்  கேடுதான் விளையும்.

3 comments:

ராஜ நடராஜன் said...

கணவன் மந்தவெளி!மனைவி எந்த இடம்ன்னு சொல்லியிருக்கலாமே!

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மனைவியின் விருப்பப்படி அவருடன் சேலம் சென்று இரு நாட்கள் இருந்துவிட்டு பின்னர் மனைவியை அழைத்துக் கொண்டு உங்கள் வீட்டிற்கு செல்லுங்கள்'என்றனர்.//

இந்த வரிகளைப் படித்தால் தெரிந்திருக்குமே

ராஜ நடராஜன் said...

நீங்க சொன்னது என் மண்டைக்கு விளங்காததற்கு மன்ன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அப்ப மந்தவெளி போயிட்டு சேலம் போயிருக்கலாம் என்றால் மறுபடியும் சென்னை வந்தாக வேண்டும். சேலம் போயிட்டு சென்னை வருவதே சரியாக இருக்கும்.