Monday, March 30, 2015

கலைஞர் எனும் விநாடி முள்

சமுதாயத்தில் ஒருவர் அலுவலகப் பணிகளிலிருந்து ஒய்வு பெற்றதும்...60 வயதை எட்டியதும், தனக்கு வயதாகிவிட்டது...இனி தன்னால்
 எந்த பயனுமில்லை..இனி தான் வாழும் ஒவ்வொரு நாளும் இறைவன் எனப்படுபவன் அளிக்கும் போனஸ் நாட்கள்..என்ற அங்கலாய்ப்புடன்...உடலில் உண்டான வியாதிகளுடனும்..இனி வேறு வியாதிகள் வந்திடுமோ! என்ற பயத்துடனும் பயந்து..பயந்து வாழும் மக்கள் நிறைந்த நாடு நம் நாடு.

ஒரு விவாதத்திற்காக சொல்கிறேன்..இனி ஒவ்வொரு நாளும் போனஸ் நாட்கள் என்று எண்ணும் நீங்கள்..ஏன் அந்த நாட்களை சமுதாயத்திற்கோ..இலக்கிய உலகிற்கோ செலவிடக் கூடாது?

உண்மையில், முதுமைதான் , வாழ்வில் அனைத்துக் கடமைகளையும் முடித்துவிட்டு..இன்பமயாக கழிக்க வேண்டிய நாட்கள் முதியோர்க்கு,அதைவிடுத்து, மரணத்தை எண்ணி ஏன் கவலைப்பட வேண்டும்.

"மரணத்தைப் பற்றிக் கவலைப்படாதே
நீ இருக்கும் போது அது வரப்போவதில்லை
அது வரும்போது நீ இருக்கப் போவதில்லை" என்கிறார் விவேகானந்தர்,

சரி...விஷயத்திற்கு வருவோம்...இப்போது நான் சொல்லப் போவது 91வயது இளைஞன் பற்றி..

உழைப்பிற்கு தேனீயை உதாரணம் சொல்வார்கள்.ஆனால் அதைவிட இறக்கும் வரை விடாது உழைப்பது "விநாடி முள்" ஆகும்.அது நின்றுவிட்டால் அந்தக் கடிகாரம் வேலை செய்யாமல் நின்றுவிட்டது எனப் பொருள்.

கலைஞரும் விநாடி முள் போலத்தான்.வாழ்வில் ஒரு விநாடி கூட வீணாக்காது உழைப்பவர்.

உழைப்பு...உழைப்பு..உழைப்பு அதன் மறுபெயர் கலைஞர் எனலாம்.

இதுவரை 75 படங்களுக்கு கதை வசனம்..அவற்றிற்கு 100க்கும் மேற்பட்ட பாடல்கள்.ரோமாபுரி பாண்டியன், பொன்னர் சங்கர்.ரஷ்ய இலக்கிய மேதை எழுதிய காவியத்திற்கு தமிழில் .கவிதை வடிவில் நவீனம் (தாய்), தொல்காப்பியம், திருக்குறளுக்கு கலைஞர் உரை....இப்படி இலக்கியத் தொண்டிற்கு ஆற்றிய பணிகளை சொல்லிக் கொண்டே போகலாம் என்றால்....

அரசியல் வாழ்வு என்னை மறந்து விட்டாயே என்கிறது.ஐந்து முறை முதல்வர், அப்படி இல்லா காலத்தில் எதிர்க் கட்சித் தலைவர் எனத் தொடரும் பொதுப்பணி...இவை போதாது என அகவை 91 வயதிலும் "இராமானுஜர்" தொலைக் காட்சித் தொடருக்கு கதை, வசனம் எழுதப் போகிறார்.அதற்காக ராமானுஜர் பற்றிய புத்தகங்களை மீண்டும் படிக்க ஆரம்பித்து இருக்கிறார்.அவர் படிக்கத் துவங்கியுள்ள புத்தகங்கள்.

ராமகிருஷ்ணானந்தர் வங்க மொழியில் எழுதி கா.ஸ்ரீ.ஸ்ரீ யால் மொழிபெயர்க்கப்பட்ட ராமானுஜர் வாழ்க்கை வரலாறு, கவிஞர் வாலி எழுதிய 'ராமானுஜ காவியம்". டி.என்.சுகி சுப்ரமணியன் எழுதிய "ஸ்ரீ இராமானுஜர்", சாண்டில்யன் எழுதியுள்ள "மதப் புரட்சி செய்த மகான் இராமானுஜம்', பி.ஸ்ரீ.எழுதிய "ஸ்ரீ ராமானுஜர்"., கங்கா ராமமூர்த்தியின்','ஸ்ரீராமானுஜர் வாழ்வில் 100 அற்புத நிகழ்ச்சிகள்..ஆகியவை.

இன்று புத்தகத்தின் பத்து பக்கங்களைக் கூட படிக்க இயலாது, ஆன் லைனில் அவற்றைத் தேடுவோர் நடுவே...எழுத்தையும்,படிப்பையும், பொது வாழ்வையும் விடாது தொடரும் 91 வயது இளைஞன் கலைரை..விநாடிமுள்ளிற்கு அன்றி வேறு எதற்கு ஒப்பிட முடியும்.


No comments: