Monday, March 16, 2015

குறுந்தொகை-200



தலைவி கூற்று
(பருவம் வந்தகாலத்துக் கவன்ற தலைவியை நோக்கி, “இது காரன்று; வம்பு” எனக்கூறிய தோழிக்கு, “கார்ப்பருவத்துக்குரிய மேகமுழக்கமும் புதுவெள்ளமும் உள்ளன; இக்காலத்தும் தலைவர் வந்திலர்; அவர் நம்மை மறந்தார் போலும்!” என்று தலைவி கூறி வருந்தியது.)

நெய்தல் திணை- பாடலாசிரியர் அவ்வையார்

இனி பாடல்-


பெய்த குன்றத்துப் பூநாறு தண்கலுழ்
   
மீமிசைத் தாஅய வீஇ சுமந்துவந்
   
திழிதரும் புனலும் வாரார் தோழி
   
மறந்தோர் மன்ற மறவா நாமே

கால மாரி மாலை மாமழை
   
இன்னிசை யுருமின முரலும்
   
முன்வர லேமஞ் செய்தகன் றோரே.

                    - அவ்வையார்

  தோழி, கார்ப்பருவத்துப்பெய்தற்குரிய மழையையுடைய, மாலைக்காலத்து வரும் கரிய மேகங்கள்,  வித்தி வானோக்கும் புலமுடையாருக்கு இனியஒலியையுடைய இடியேற்றையுடையனவாகி முழங்கும்; முன்பு மழைபெய்த குன்றத்தின்கண், மலர் மணக்கின்ற தண்ணியகலங்கலின்மேலே, பரவிய, மலர்களைச் சுமந்து வந்து,  அருவிப்புனலும் வீழும்; கார்ப்பருவத்திற்கு முன்னரே வருவேமென்ற பாதுகாப்பைச்செய்து அகன்ற தலைவர்,  இன்னும் வாராராயினர்;அவர் நிச்சயமாக நம்மை மறந்தார்;  நாம் அவரை மறத்தல் செய்யாம்.


  (கருத்து) கார்ப்பருவம் வரவும் தலைவர் வந்தாரல்லர்.

No comments: