Saturday, September 27, 2014

குறுந்தொகை- 117


தோழி கூற்று
(தலைவன் தலைவியை மணக்காமல் நெடுநாள் ஒழுகினானாக, அவ்வொழுக்கத்தால் வரும் அச்சத்தினும் அவன் வாராதமைவதால் வரும் துன்பம் பொறுத்துக் கொள்ளுதற்கரியது என்று தலைவிக்குக் கூறும் வாயிலாகத் தோழி மணத்தின் இன்றியமையாமையைப் புலப்படுத்தியது.)

நெய்தல் திணை- பாடலாசிரியர் குன்றியனார்

இனி பாடல் -

மாரி யாம்ப லன்ன கொக்கின்
   
பார்வ லஞ்சிய பருவர லீர்ஞெண்டு
   
கண்டல் வேரளைச் செலீஇய ரண்டர்
   
கயிறரி யெருத்திற் கதழுந் துறைவன்

வாரா தமையினு மமைக்
   
சிறியவு முளவீண்டு விலைஞர்கை வளையே.

                      - குன்றியனார்


உரை-

(தோழி) மாரிக்காலத்து ஆம்பல் மலரைப் போன்ற தோற்றத்தையுடைய கொக்கினது பார்வையை அஞ்சிய துன்பத்தையுடைய ஈரமான நண்டு தாழை வேரினிடையே உள்ள வளைக்குள் செல்லும் பொருட்டு இடையராற் பிணிக்கப்பட்ட கயிற்றை அறுத்துச் செல்லும் எருதைப் போல , விரைந்து செல்லுவதற்கிடமாகிய கடல் துறையையுடைய  தலைவன் இங்கு வராமல் பொருந்தினும் பொருந்துக.அவன் வராமையால் உன் உடல் மெலிய உன் கைகளில் அணிந்த வளைகளை இழப்பினும் பிறருக்கு அம்மெலிவு புலப்படாமல் செரிப்பதற்குரியனவாகிய விற்பார் தரும் கைவளைகளுள் சிறிய அளவையுடையனும் இங்கு உள்ளன.


     (கருத்து) தலைவன் மணந்து கொள்ளாமையால் உண்டான மெலிவை நாம் மறைத்து ஒழுகுவோமாக.

   

   

     (கொக்கின் பார்வையை அஞ்சி நண்டு தன் வளையிலே தங்குவதைப் போல, ஊரினர் பழிமொழியை அஞ்சித் தலைவன் தலைவியை விரைவில் மணந்துகொண்டு தன் அகத்தே இல்லறம் நடத்தற்குரியன் என்பது குறிப்பு.)

No comments: