Tuesday, September 30, 2014

குறுந்தொகை - 120


தலைவன் கூற்று
(தலைவன் வழக்கமாக சந்திக்கும் இடத்தில் வந்ததைக் குறிப்பால் அறிவித்த காலத்தில் தலைவி  வாராதொழிய, வருத்தமுற்ற தலைவன், “தலைவி நன்மையை உடையாள் என்பதை அறிந்தது போலப் பெறுதற் கரியாள் என்பதையும் இதுகாறும் அறிந்திலையே!” என்று தன் நெஞ்சை நோக்கிக் கூறியது.)

குறிஞ்சித் திணை - பாடலாசிரியர் பரணர்

இனி பாடல்-

 
இல்லோ னின்பங் காமுற் றாஅங்
   
கரிதுவேட் டனையா னெஞ்சே காதலி
   
நல்ல ளாகுத லறிந்தாங்
   
கரிய ளாகுத லறியா தோயே.

        - பரணர்

உரை-  பொருளில்லாத வறியவன் இன்பத்தை விரும்பினாற்போல, பெறுதற்கரியதை நீ விரும்பினாய். தலைவி நமக்கு நன்மை தருபவளாதலை அறிந்தது போல நாம் நினைக்கும் பொழுதெல்லாம் நமக்கு எளியளாய் வருவதின்றிப் பெறற்கரியளாதலையும் அறியவில்லை.



   (கருத்து)தலைவி பெறுதற்கரியவள்.


 இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் தலைவியைப் பிரிந்து, ‘ இனி இவளைக் காணுமாறு எங்ஙனம்!” என்று மயங்கி, “இதுகாறும் நமக்கு நல்லளாகிய இவள் இனி அரியளன்றே!” என்று நெஞ்சை நோக்கிக் கூறியது.

Monday, September 29, 2014

குறுந்தொகை -119



தலைவன் கூற்று
(இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து மீண்ட தலைமகனது வேறுபாடு கண்ட பாங்கன், “நினக்கு இஃது எற்றினான் ஆயிற்று?” என்றவழி, “ஓர் இளைய மகளால் ஆயிற்று” என்று தலைவன் கூறியது.)

குறிஞ்சி திணை - பாடலாசிரியர் சத்தி நாதனார்

இனி பாடல்-

   
சிறுவெள் ளரவி னவ்வரிக் குருளை
   
கான யானை யணங்கி யாஅங்
   
கிளையண் முளைவா ளெயிற்றள்
   
வளையுடைக் கையளெம் மணங்கி யோளே.


                                   -சத்தி நாதனார்

உரை-

இளமையை உடையவளும், நாணல் முளையைப் போன்ற ஒளியையுடைய பற்களை உடையவளும், வளையினை உடைய கையினை உடையவளுமாகிய ஒருத்தி, வெள்ளிய பாம்பினது அழகிய கோடுகளையுடைய குட்டியானது காட்டுயானையை வருத்தினாற் போல எம்மை வருந்தச் செய்தனள்.



     (கருத்து) ஓர் இளைய மகள் என்னைத் தன் அழகினால் வருத்தினாள்.

(வெள்ளிய பாம்பு_ கோதுமை நாகம்.,


     இளைய பாம்புக்குட்டியானது, பிறருக்கு அடங்காது திரியும் யானையைத் தீண்டி வருத்தியது போல, இளமையை உடைய தலைவி பகைவரால் தோல்வியுறாத என்னை வருத்தினாள் 

Sunday, September 28, 2014

குறுந்தொகை-118



தலைவி கூற்று
(தலைவன் வரைந்து கொள்ளாமல் நெடுநாள் இருப்ப, தலைவி அவன் வரவை ஒவ்வொரு நாளும் எதிர்நோக்குவாளாய் மாலைப் பொழுதில், “இன்னும் வந்திலர்” என்று கூறி வருந்தியது.)

நெய்தல் திணை - பாடலாசிரியர் நன்னாகையார்

இனி பாடல்-

 
புள்ளு மாவும் புலம்பொடு வதிய்
   
நள்ளென வந்த நாரின் மாலைப்
   
பலர்புகு வாயி லடைப்பக் கடவுநர்
   
வருவீ ருளீரோ வெனவும்

வாரார் தோழிநங் காத லோரே.

                    -நன்னாகையார்

   உரை-

(தோழி) பறவைகளும், விலங்குகளும் தனிமையோடு தங்க , நள்ளென்னும் ஓசைபட வந்த அன்பில்லாத மாலைக் காலத்தில் பலரும் புகுதற்குரிய வீட்டு வாயிலை அடைக்க எண்ணி வினாவுவார் உள்ளே வருவீர் இருக்கின்றனிரோ! என்று கேட்கவும் நம் தலைவர் வாரார் ஆயினர்.
 .


     (கருத்து) நம் தலைவர் இன்றும் வந்திலர்.

 
    ( தனக்குத் துன்பம் பயப்பதுபற்றி மாலையை நாரின் மாலையென்றாள், தன் வீட்டில் விருந்தினர் பலர் வந்து உண்ணுவாராதலின் அவர் தடையின்றிப் புகும் வாயிலைப் பலர் புகுவாயிலென்றாள். இராக் காலத்தில் விருந்தினர்களைப் புகவிட்டுப் பின்னும் எவரேனும் உள்ளாரோ என ஆராய்வாராகி ஏவலாளர்கள் வினவி, ஒருவரும் இலராக வாயிற்கதவை அடைத்தனர். தலைவன் வந்திருப்பின் விருந்தினர் கூட்டத்தில் ஒருவனாகப் புகுவான் அவன் அங்ஙனம் புகவில்லை ஆதலின், அவர் வந்திலரென்று தலைவி கூறினாள்.)

Saturday, September 27, 2014

குறுந்தொகை- 117


தோழி கூற்று
(தலைவன் தலைவியை மணக்காமல் நெடுநாள் ஒழுகினானாக, அவ்வொழுக்கத்தால் வரும் அச்சத்தினும் அவன் வாராதமைவதால் வரும் துன்பம் பொறுத்துக் கொள்ளுதற்கரியது என்று தலைவிக்குக் கூறும் வாயிலாகத் தோழி மணத்தின் இன்றியமையாமையைப் புலப்படுத்தியது.)

நெய்தல் திணை- பாடலாசிரியர் குன்றியனார்

இனி பாடல் -

மாரி யாம்ப லன்ன கொக்கின்
   
பார்வ லஞ்சிய பருவர லீர்ஞெண்டு
   
கண்டல் வேரளைச் செலீஇய ரண்டர்
   
கயிறரி யெருத்திற் கதழுந் துறைவன்

வாரா தமையினு மமைக்
   
சிறியவு முளவீண்டு விலைஞர்கை வளையே.

                      - குன்றியனார்


உரை-

(தோழி) மாரிக்காலத்து ஆம்பல் மலரைப் போன்ற தோற்றத்தையுடைய கொக்கினது பார்வையை அஞ்சிய துன்பத்தையுடைய ஈரமான நண்டு தாழை வேரினிடையே உள்ள வளைக்குள் செல்லும் பொருட்டு இடையராற் பிணிக்கப்பட்ட கயிற்றை அறுத்துச் செல்லும் எருதைப் போல , விரைந்து செல்லுவதற்கிடமாகிய கடல் துறையையுடைய  தலைவன் இங்கு வராமல் பொருந்தினும் பொருந்துக.அவன் வராமையால் உன் உடல் மெலிய உன் கைகளில் அணிந்த வளைகளை இழப்பினும் பிறருக்கு அம்மெலிவு புலப்படாமல் செரிப்பதற்குரியனவாகிய விற்பார் தரும் கைவளைகளுள் சிறிய அளவையுடையனும் இங்கு உள்ளன.


     (கருத்து) தலைவன் மணந்து கொள்ளாமையால் உண்டான மெலிவை நாம் மறைத்து ஒழுகுவோமாக.

   

   

     (கொக்கின் பார்வையை அஞ்சி நண்டு தன் வளையிலே தங்குவதைப் போல, ஊரினர் பழிமொழியை அஞ்சித் தலைவன் தலைவியை விரைவில் மணந்துகொண்டு தன் அகத்தே இல்லறம் நடத்தற்குரியன் என்பது குறிப்பு.)

Friday, September 26, 2014

குறுந்தொகை - 116


தலைவன் கூற்று
( தலைவியைக் கண்டு அளவளாவிய தலைவன் அவளது கூந்தற் சிறப்பைப் பாராட்டி நெஞ்சிற்குக் கூறியது.)

குறிஞ்சி திணை - பாடலாசிரியர் இளங்கீரன்

இனி பாடல்

யானயந் துறைவோ டேம்பாய் கூந்தல்
   
வளங்கெழு சோழ ருறந்தைப் பெருந்துறை
   
நுண்மண லறல்வார்ந் தன்ன
   
நன்னெறி யவ்வே நறுந்தண் ணியவே.

               - இளங்கீரன்

உரை-

(நெஞ்சே) என்னால் விரும்பப் பெற்றுத் தங்கும் தலைவியினது வண்டுகள் தாவுகின்ற கூந்தல் ,வளப்பம் பொருந்திய சோழரது உறையூரில் பெரிய நீர்த்துறையில் உள்ள நுண்ணிய கருமணல் நீண்டு படந்தாற் போன்ற நல்ல நெறிப்பை உடையன.வாசனைத் தன்மையும் உடையன.’.


     (கருத்து) தலைவியின் கூந்தல் நெறிப்பையும் நறுமணத்தையும் தண்மையையும் உடையன.

 (உறந்தை பெருந்துறை- காவிரித்துறை நெறிப்பு - படிப்படியாய் நீரோட்டத்தினால் மணலில் உண்டாகும் சுவடு).

     இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைவன், தலைவியின் கூந்தலாகிய மெல்லணையில் துஞ்சி இன்புற்றவன் ஆதலின் அக் கூந்தலின் இயல்புகளை நினைந்து, இவற்றாற் பெறும் இன்பத்தை இடைவிடாமல் நுகரும் பேறு பெற்றிலேமே என்னும் இரக்கக் குறிப்புப்பட இதனைத் தன் நெஞ்சிற்குக் கூறினான்.

Thursday, September 25, 2014

எங்கே போகிறோம்...??

                                       

வாழ்வா..சாவா..

போராட்டத்தில் ஒரு உயிர்

எள்ளளவும் காப்பாற்ற முயலாமல்

கடுகளவும் வருத்தப்படாமல்

படம் பிடித்து அதை

விளம்பரம் ஆக்கும் கூட்டம்

எங்கே போகிறோம் நாம்

மனித நேயம்

செத்துத் தொலைந்ததா

நம்மிடம்..


குறுந்தொகை- 115



தோழி கூற்று
(தலைவனுடன் போகும்படி தலைவியை உய்க்கும் தோழி, “இவளை எக்காலத்தும் அன்பு வைத்துப் பாதுகாப்பாயாக” என்று அவனுக்குக் கூறியது.)

குறிஞ்சி திணை- பாடலாசிரியர் கபிலர்

இனி பாடல்
 
பெருநன் றாற்றிற் பேணாரு முளரே
 
ஒருநன் றுடைய ளாயினும் புரிமாண்டு
 
புலவி தீர வாளிமதி யிலைகவர்
 
பாடமை யொழுகிய தண்ணறுஞ் சாரல்

மென்னடை மரையா துஞ்சும்
 
நன்மலை நாட நின்னல திலளே.

                -கபிலர்

உரை-


அசைகின்ற மூங்கில்கள் நீண்டு வளர்ந்த தண்ணிய நறிய மலைப் பக்கத்தின் கண் மெல்லிய நடையையுடைய மரையா இலைகளை விரும்பி உண்டு துயிலுதற்கிடமாகிய நல்ல மலை நாட்டையுடைய தலைவ, பெரிய நன்மை ஒன்றை ஒருவர் நமக்குச் செய்தால் அங்ஙனம் செய்தாரைப் போற்றாதாரும் உள்ளாரோ?(யாவரும் போற்றுவர்)அது சிறப்பன்று.சிறிதளவு நன்மையை இத்தலைவி பெற்றவளாக இருக்கும் காலத்திலும் விருப்பம் மாட்சைமைப்பட்டு நீங்கும் வண்ணம் இவளை பாதுகாப்பாயாக!இவள் உன்னை அன்றி வேறு பற்றுக்கோடு இல்லாள்.


      (கருத்து) இவள்பால் இன்று போல என்றும் அன்பு வைத்துப் பாது காப்பாயாக.

( ‘‘இவள் நினக்குப் பலவகையிலும் இன்பம் தரும் நிலையில் இருக்கின்றாள்; இவள்பால் இப்பொழுது நீ அன்பு பூண்டு பாதுகாத்தல் பெரிதன்று; பெரிய உபகாரம் செய்தாரைப் பாதுகாத்தல் உலகில் யாவர்க்கும் இயல்பே. ஆதலின் இவளால் இப்பொழுது பெறும் இன்பத்தை அடைய முடியாத முதுமைப் பருவத்திலும் இவளுக்கு நின் பாலுள்ள அன்பொன் றையே கருதிப் பாதுகாத்து வருவாயாக. இவளைப் பாதுகாப்பதற்கு வேறு யாரும் இலர்” என்று தோழி கூறித் தலைவியைத் தலைவனுடன் விடுத்தாள்.)

 
     மரையா(ஒருவகை விலங்கு) தனக்குப் பயன்படாது ஓங்கி வளர்ந்த மூங்கில்களையுடைய சாரலாயினும் தனக்குப் பயன்படும் இலைகளைத் தேடியுண்டு அதன்கண் அன்புவைத்துத் துயில்வதுபோல நினக்குப் பயன்படாத மூப்புடையளாயினும் நினக்கு உவந்த நல்லியல்பு கண்டு இன்புற்று இவள்பால் அன்பு வைத்தொழுகு வாயாக வென்பது குறிப்பு.

Wednesday, September 24, 2014

குறுந்தொகை - 114


தோழி கூற்று
(தலைவியை அவனை சந்திக்கும் இடத்தில் நிறுத்தி வந்த தோழி தலைவனிடம் வந்து அதனைக் குறிப்பாகப் புலப்படுத்தியது.)

நெய்தல் திணை - பாடலாசிரியர் பொன்னாகன்.

இனி பாடல்-

நெய்தற் பரப்பிற் பாவை கிடப்பி
   
நின்குறி வந்தனெ னியறேர்க் கொண்க
   
செல்கஞ் செலவியங் கொண்மோ வல்கலும்
   
ஆர லருந்த வயிற்ற

நாரை மிதிக்கு மென்மக ணுதலே.

                -பொன்னாகன்.

உரை-

இயற்றப்பட்ட தேரை உடைய தலைவனே! நெய்தல் நிலத்தில் எனது பாவையை வளர்த்திவிட்டு நீ இருக்குமிடத்து வந்தேன்.இரவு வருதலும் ஆரல் மீனை அருந்தி நிறைந்த வயிற்றையுடைய ஆகிய நாரைகள் என் மகளாகிய அப்பெண்ணின் நெற்றியை மிதிக்கும்.நான் செல்கிறேன்.அவளை போகும்படி நீயே சொல்வாயாக.
   
   

     (கருத்து) தலைவியைக் கண்டு அளவளாவி விரைவில் விடுப்பாயாக.


     (என் மகள் என்றது பாவையை, பாவையினிடத்தே அன்பு பூண்டு அதனைப் போற்றி வளர்த்தலும், மணம் முதலிய செய்து மகிழ்தலும் மகளிர்க்கு இயல்பு.)

Tuesday, September 23, 2014

வீசப்பட்ட கல்

               


என் மனம் எனும்

ஏரியில்

கல்லினை வீசி விட்டாய்

நீ அறியாய்

அது சென்றடையும்

ஆழத்தை


குறுந்தொகை-113



தோழி கூற்று
(பகல் நேரத்தில் வந்து அளவளாவிய தலைவனுக்குத் தாம் பயிலும் இடத்தை மாற்றி வேறிடங்கூறுவாளாய், “தலைவி காட்டாற்றங் கரையிலுள்ள பொழிலுக்கு எம்முடன் வருவாள்” என்று அங்கு வரும் வண்ணம் குறிப்பாகத் தோழி கூறியது.)

மருதம் திணை- பாடலாசிரியர் மாதிரத்தன்

இனி பாடல்-
 
ஊர்க்கு மணித்தே பொய்கை பொய்கைக்குச்
 
சேய்த்து மன்றே சிறுகான் யாறே
 
இரைதேர் வெண்குரு கல்ல தியாவதும்
 
துன்னலபோ கின்றாற் பொழிலே யாமெம்

கூழைக் கெருமண் கொணர்கஞ் சேறும்
 
ஆண்டும் வருகுவள் பெரும்பே தையே.

                   -மாதிரத்தன்


உரை-

(தலைவா) பொய்கை ஊருக்கும் அருகிலுள்ளது சிறிய காட்டாறு, அப்பொய்கைக்கும் அருகிலே உள்ள சோலை.அப்பொய்கையிலும்,ஆற்றிலும் உணவைத் தேடும் வெள்ளிய நாரைகளை அன்றி வேறு எந்த உயிரும் நெருங்காது ஒழியும்.நாங்கள் எங்கள் கூந்தலுக்கு இட்டுப் பிசையும் பொருட்டு எருமண்னை கொணர அங்கு செல்வோம்.பெரியபேதமையையுடைய தலைவி அங்கும் வருவாள்.


    (கருத்து) பொய்கைக்கு அணித்தாகிய காட்டாற்றின் கரையிலுள்ள பொழிலகத்தே தலைவியைக் கண்டு பேசலாம்

Monday, September 22, 2014

குறுந்தொகை-112




தலைவி கூற்று
(தலைவன் மணந்து கொள்ளாமல் நெடுநாள் ஒழுகினானாயின், “நான் ஊரார் பழிமொழிக்கு அஞ்சி மறைந்து ஒழுகுகின்றேன்;அதனால் என் காமம் மெலிகின்றது; அதனை முற்றும் விடும் நிலையைப் பெறும் ஆற்றலில்லை என்னிடம்
” என்று கூறித் தலைவி வருந்தியது.)

குறிஞ்சி திணை - பாடலாசிரியர் ஆலத்தூர்கிழார்

இனி பாடல்-
 
கௌவை யஞ்சிற் காம மெய்க்கும்
 
எள்ளற விடினே யுள்ளது நாணே
 
பெருங்களிறு வாங்க முரிந்து நிலம் படாஅ
 
நாருடை யொசிய லற்றே

கண்டிசிற் றோழியவ ருண்டவென் னலனே.

                -ஆலத்தூர் கிழார்

உரை-

பிறர் கூறும் பழிமொழிக்கு அஞ்சினால், (என்) காமம் மெலிவடையும்.பிறர் இழித்தலுக்காக அக்காமத்தை விட்டு விட்டால், என்னிடம் இருப்பது நாணம் மட்டுமே! ஆகும்.தலைவன் அனுபவித்த எனது பெண்மை, பெரிய யானை உண்ணுவதற்காக வளைத்து, நிலத்தில் படாத பட்டையை உடைய ஒடிந்த கிளையை போன்றாற்போலது ஆகும்.



     (கருத்து) ஊரார் பழிக்கு அஞ்சிக் காமத்தை மிகுதியாக வெளிப்படுத்தாமல் இருக்கின்றேன்.

 


     களிறு வளைத்துத் தழைகளை உண்டதனால் ஒடிந்த மரக்கிளை ஆனது தன்னுடைய இயல்பான நிலையை ஒழிந்து மீட்டும் அந்நிலையைப் பெறாத வண்ணம் இருப்பினும், முற்ற ஒடிந்து கீழே விழுந்து வாடி உலராமல் நாரின் தொடர்பினால் மீண்டும் தழைக்கும் நிலையில் இருத் தலைப்போல, தலைவனால் உண்ணப்பட்ட நலன் தன் பண்டை நிலைமையைப் பெறாத நிலையிலிருப்பினும், முற்றும் அழிந்தொழியாமையால் தலைவர் வரைவார் என்னும் கருத்தினால் பின் சிறக்கத்தக்க நிலையில் அமைந்துள்ளது..

Saturday, September 20, 2014

குறுந்தொகை - 111




தோழி கூற்று
(தலைவன் வேலிப்புறத்தானாக அவனுக்குப் புலப்படும்படி தோழி, “நின்மேனியின் வேறுபாடு கண்டு அன்னை வெறியாடத் தொடங்கினாள். அவ் வேறுபாடு நீங்குதற்குரிய வழி வெறியாடலன்றென்பதைத் தாய் அறியும் பொருட்டுத் தலைவன் இங்கே வந்து செல்லுதல் நலம்” என்று தலைவியை நோக்கிக் கூறியது.)

குறிஞ்சி திணை- பாடலாசிரியர் தீன்மிது நாகன்

இனி பாடல்-
 
மென்றோ ணெகிழ்த்த செல்லல் வேலன்
   
வென்றி நெடுவே ளென்னு மன்னையும்
   
அதுவென வுணரு மாயி னாயிடைக்
   
கூழை யிரும்பிடிக் கைகரந் தன்ன

கேழிருந் துறுகற் கெழுமலை நாடன்
   
வல்லே வருக தோழிநம்
   
இல்லோர் பெருநகை காணிய சிறிதே.

                       - தீன்மதி நாகன்

உரை-

(தோழி) மெல்லிய தோளை மெலியச் செய்த துன்பம் வெறியாட்டாளன், வெற்றியையுடைய நெடிய முருகக் கடவுளால் வந்ததென்று சொல்வான்.நம் தாயும் அதுவென நினைப்பாளாயின் அப்போது கருமையான பெண் யானையினது கை மறைந்தாற் போன்ற கரி நிறத்தையுடைய பெரிய குண்டுக்கல் பொருந்திய மலைநாட்டையுடைய தலைவன் நம வீட்டிலுள்ளாரது பெரிய நகைக்கிடமான செய்கையை காணும் பொருட்டு சிறிது நேரமிங்கு விரைந்து வந்து செல்வானாக!


     (கருத்து) தாய் நின் வேறுபாடு கண்டு வெறியெடுத்தலைத் தலைவன் அறிவானாக.



 சிறைப்புறமாக இருந்த தலைவனுக்கு, “தலைவன் இன்னும் வரைந்து கொள்ளாமையால் தலைவி துன்புற்றாள்; அவளுடைய அகத்துன்பம் புறத்தாருக்குப் புலனாகும்படி அவள் தோள்கள் நெகிழ்ந்தன. அதுகண்டு தாய் வெறியாட்டெடுக்க எண்ணியுள்ளாள்” என்பதைப் புலப்படுத்தினாளாயிற்று. தலைவன் இதனை யுணர்ந்து விரைவில் வரைந்து கொள்ளுதல் இதன் பயன்.

Friday, September 19, 2014

குறுந்தொகை-110


தலைவி கூற்று
(தலைவன் கூறிச் சென்ற பருவம் வரவும் அவன் வரவில்லை. “இனி அவர் வந்தாலும், வராவிடினும் நமக்குப் பயனொன்றுமில்லை; நான் இறந்து விடுவேன்” என்று தலைவி கூறியது.)

முல்லை திணை- பாடலாசிரியர் கிளிமங்கலங்கிழார்

இனி பாடல்-

 
வாரா ராயினும் வரினு மவர்நமக்
   
கியாரா கியரோ தோழி நீர
   
நீலப் பைம்போ துளரிப் புதல
   
பீலி யொண்பொறிக் கருவிளை யாட்டி

நுண்மு ளீங்கைச் செவ்வரும் பூழ்த்த
   
வண்ணத் துய்ம்மல ருதிரத் தண்ணென்
   
றின்னா தெறிதரும் வாடையொ
   
டென்னா யினள்கொ லென்னா தோரே.

                     - கிள்ளிமங்கலங்கிழார்

உரை-

நீரிலுள்ள நீலத்தினது மலரும் செவ்வியையுடைய பேரரும்பை மலரச் செய்து புதலில் உள்ள மயில்தோகையில் உள்ள கண்னைப் போன்ற கருவிளை மலரை அலைத்து, நுண்ணிய முள்ளையுடைய ஈங்கையினது செவ்விய அரும்புகள் மலர்ந்த நிறத்தையும், துய்யையும் உடைய மலர்கள் உதிரும்படி குளிர்ச்சியுடையதாகி இன்னாததாகி வீசுகின்ற வாடைக்காற்றால் எத்தன்மையினள் ஆனாளோ? என நினைத்து கவலைப்படாத தலைவன் இனி வந்தாலும், வராவிட்டாலும் நமக்கு எத்தகைய உறவினர் ஆவார்? (வருவதற்குள் இறந்துவிடுவேன்)


   

     (கருத்து) தலைவர் வராவிட்டால் நான் இறந்துவிடுவேன்.

     (“உயிரோடிருப்பின் அவர் வந்தால் இன்புறுவேன்; அவர் வருதற்குரித்தான இப்பருவத்தில் வாராமையால் நான் இனி இறந்து விடுவேன்; நான் இறந்துபட்ட பின்னர் அவர் வரினும் வாராவிடினும் எனக்கு ஆகும் ?பயன் ஒன்றுமில்லை” என்று தலைவி கூறினாள்.)

   

Thursday, September 18, 2014

குறுந்தொகை-109



தோழி கூற்று
(தலைவன் கேட்கும் அண்மையனாக இருக்கையில் தலைவிக்குக் கூறுபவளாய், “தலைவர் நாடோறும் வந்து பயின்று செல்லும் இக்காலத்தில் நின் நுதற்கவின் மாறியது என்?” என்று தோழி, அவனுக்கு வரைய வேண்டியதன் இன்றியமையாமையைப் புலப்படுத்தியது.)

நெய்தல் திணை- பாடலாசிரியர் நம்பி குட்டுவன்

இனி பாடல்
 
முடக்கா லிறவின் முடங்குபுறப் பெருங்கிளை
   
புணரி யிகுதிரை தரூஉந் துறைவன்
   
புணரிய விருந்த ஞான்றும்
   
இன்னது மன்னோ நன்னுதற் கவினே.

                    -நம்பி குட்டுவன்

உரை-

வளைவையுடைய காலையுடைய இறாமீனின் , வளைந்த முதுகையுடைய பெரிய இனத்தை கடலில் தாழும் அலையானது கொண்டு வந்து தருவதற்கு இடமாகிய துறையையுடைய தலைவன், அளவளாவ இருந்த பொழுதும், உனது நல்ல நெற்றியின் அழகு பிறர் பழிக்கும் வண்ணம் குறைபாட்டையுடைய இத்தகையாயிற்று (பசலை நோயால்).இது இரங்கற்குரியது


     (கருத்து) தலைவன் மணந்தால் அன்றி நின் வேறுபாடு நீங்காது.


   நுதற்கவின் இன்னதென்றது பசலை பெற்றதைக் குறித்தது. களவுக் காலத்து இடையீடு உண்மையின் அதனால் வருந்திய தலைவியின் நிலை நீங்க அவளை மணந்து கொண்டு உடனுறைந்து இல்வாழ்க்கை நடத்தலே தகுதியென்று தோழி குறிப்பால் அறிவுறுத்தினாள்.

Wednesday, September 17, 2014

குறுந்தொகை- 108


தலைவி கூற்று
(கார்ப்பருவம் வந்தது கண்ட தலைவி, “இன்னும் தலைவர் வரவில்லை. இனியும் அவன் பிரிவை பொறுத்திருக்க மாட்டேன்"  என்று வருந்திக் கூறியது.)
 
முல்லை திணை - பாடலாசிரியர் வாயிலான்றேவன்

இனி பாடல்-

 
மழைவிளை யாடுங் குன்றுசேர் சிறுகுடிக்
   
கறவை கன்றுவயிற் படரப் புறவிற்
   
பாசிலை முல்லை யாசில் வான்பூச
   
செவ்வான் செவ்வி கொண்டன்

றுய்யேன் போல்வ றோழி யானே.

                     - வாயிலான்றேவன்

உரை-

(தோழி) மேகங்கள் விளையாடுவதற்கிடமான மலையைச் சேர்ந்த சிற்றூரினிடத்து மேயும் பொருட்டு சென்றிருந்த பசுக்கள், தனது கன்றுகளை நினைத்துச் செல்ல முல்லை நிலத்தில் பசிய இலைகளிடையே முல்லையினது சிறந்த மலர்ப் பரப்பு சிவந்த வானத்தின் அழகைக் கொண்டது’.இக்கார்பருவத்து மாலையில் தலைவர் வராவிடின் நான் உயிர் வாழேன்

 
    (கருத்து) கார்ப்பருவம் வந்துவிட்டது; தலைவர் பிரிவை இனியும் என்னால் பொறுத்திருக்க இயலாது

Tuesday, September 16, 2014

குறுந்தொகை- 107


தலைவி கூற்று
(பொருளீட்ட பிரிந்த தலைவன் மீண்டும் வரப்பெற்று அவனோடு இன்புற்ற தலைவி பொழுது புலர்ந்தமையால் துயருற்று, “எம்மைத் துயிலினின்றும் எழுப்பிய சேவலே! நீ இறந்து படுவாயாக” என்று கூறித் தன் காமமிகுதியைப் புலப்படுத்தியது.)


 மருதம் திணை- பாடலாசிரியர் மதுரைக் கண்ணனார்

இனி பாடல்-

 
குவியிணர்த் தோன்றி யொண்பூ வன்ன
   
தொகுசெந் நெற்றிக் கணங்கொள் சேவல்
   
நள்ளிருள் யாமத் தில்லெலி பார்க்கும்
   
பிள்ளை வெருகிற் கல்கிரை யாகிக்

கடுநவைப் படீஇயரோ நீயே நெடுநீர்
   
யாண ரூரன் றன்னொடு வதிந்த்
   
ஏம வின்றுயி லெடுப்பி யோயே.

                           - மதுரைக் கண்ணனார்


உரை-

குவிந்த கொத்துக்களையுடைய செங்காந்தளினது ஒள்ளீய பூவைப் போன்ற தொக்க சிவந்த கொண்டையையுடைய கூட்டங்கொண்ட சேவலே, ஆழமாகிய நீரில் உண்டாகும் புது வருவாயையுடைய ஊரையுடைய தலைவனுடன் தங்கிய இன்பத்தைத் தரும் இனிய துயிலினின்றும் எம்மை எழுப்பினை..இருள் பிரியா இரவில்.(ஆதலால்) வீட்டிலுள்ள எலிகளை உண்ணூம் பொருட்டு அலையும் காட்டுப் பூனையின் குட்டிக்கு சிலநாள் வைத்திருந்து உண்ணும் உணவாகை..மிக்க துன்பத்தை அடைவாயாக!




     (கருத்து) பொழுது புலர்ந்தமையால் நான் துன்புறுவேனாயினேன்.

(தலைவி காம மயக்கத்தில் இருக்கையில், பொழுது புலர்ந்ததென்று உணர்த்திய சேவல் தவறாக உணர்த்தியது போல இருந்தமையால் இப்படிக் கூறுகிறாள்

.

Monday, September 15, 2014

குறுந்தொகை - 106



தலைவி கூற்று
(பரத்தையிற் பிரிந்த தலைவன் தான் குறைவில்லா அன்புடையனென்று கூறித் தூது விடுப்ப, அதனையறிந்த தலைவி, “தலைவர் உள்ளத்தாற் பொய்யாது அன்புடையராயின் யாமும் பழைய அன்புடையே மென்பதை அவருக்குக் கூறி விடுப்போம்” என்று தோழிக்குக் கூறும் வாயிலாகத் தான் வாயில் நேர்ந்ததைப் புலப்படுத்தியது.)

குறிஞ்சி திணை- பாடலாசிரியர் கபிலர்

இனி பாடல்-


புல்வீ ழிற்றிக் கல்லிவர் வெள்வேர்
   
வரையிழி யருவியிற் றோன்று நாடன்
   
தீதி னெஞ்சத்துக் கிளவி நம்வயின்
   
வந்தன்று வாழி தோழி நாமும்

நெய்பெய் தீயி னெதிர்கொண்டு்
   
தான்மணந் தனையமென விடுகந் தூதே.

                     -கபிலர்

     (பி-ம்.) 1. ‘வீழாற்றிக்’, ‘வீழித்திக்’; 3. ‘தீதின்னெஞ்சத்துக்’; 4. ‘நயந்தன்று’; 6. தாமளந்தனைய, தாம்வரைந்தனைய.

 புல்லிய விழுதை யுடைய இற்றிமரத்தினது,  மலையிலுள்ள கற்களிற் படர்கின்ற வெள்ளிய வேர்,  மலைப்பக்கத்தில் வீழ்கின்ற அருவியைப்போலத் தோன்றும்,  நாட்டையுடைய தலைவன்,  குற்றமற்ற நெஞ்சினால் நினைந்து கூறிய சொற்களை உரைக்கும் தூது, நம்மிடத்து வந்தது; நாமும்,  நெய்யைப் பெய்த தீயைப்போல,  அத்தூதை ஏற்றுக்கொண்டு,  அவன் என்னை மணந்த காலத்தில் இருந்த அன்புடைய நிலையினேம் என்று கூறி,  தூதுவிடுவோம்.


    (கருத்து) தலைவனை நாம் ஏற்றுக் கொள்வோமாக.

     (வி-ரை.) தலைவன் பரத்தையிற் பிரிந்தானாக அவன் அன்பிலனென் றெண்ணிய தலைவியின்பால் அவன் விடுத்த தூது, “தலைவன் தலை நாளன்ன அன்பினன்; அவனை ஏற்றருள வேண்டும்’’ என்று கூறியது கேட்ட அவள், “அவன் அத்தகையனாயின் நாமும் மணநாளின்கண் வைத்திருந்த அன்பிற்குறைவின்றியுள்ளேமென்று தூது விடுவேம்” என்று தோழிக்குக் கூறியது இது.

 

Saturday, September 13, 2014

குறுந்தொகை - 105



தலைவி கூற்று
(தலைவன் நெடுங்காலம் வரையாமல் பிரிந்திருந்தானாக, “தலைவன் நட்பு அவன் வராததால் உண்மையாகாமல் என் நினைவளவில் நின்று துன்புறுத்துகின்றது” என்று கூறித் தலைவி வருந்தியது.)

குறிஞ்சி திணை-பாடலாசிரியர் நக்கீரர்

இனி பாடல்-
 
புனவன் றுடவைப் பொன்போற் சிறுதினைக்
   
கடியுண் கடவுட் கிட்ட செழுங்குரல்
   
அறியா துண்ட மஞ்ஞை யாடுமகள்
   
வெறியுறு வனப்பின் வெய்துற்று நடுங்கும்

சூர்மலை நாடன் கேண்மை்
   
நீர்மலி கண்ணொடு நினைப்பா கின்றே.

                   -நக்கீரர்

உரை-

குறவனுக்குரிய தோட்டத்தில் விளைந்த பொன்னைப் போன்ற சிறு தினையில் புதியதை, உண்ணும் தெய்வத்திற்குப் பலியாக இட்ட வளர்ந்த கதிரை தெரியாது உண்ட மயில், ஆடுமகள்(கணிகை) வெறியாடுகின்ற அழகைப் போல வெம்மையுற்று நடுங்குவதற்கு இடமாகிய தெய்வங்கள் உறையும் மலைநாட்டையுடைய தலைவனது நட்பு கண்ணீர் மிக்க கண்களோடு நான் நினைந்து துன்புறுதற்குக் காரணமாகியது.

   
     (கருத்து) தலைவன் வராததால் அவனை நினைந்து துன்புறு கின்றேன்.

, (மலைவாழ் மக்கள் தினையை  விளைத்து அதில் தோற்றும் முதற் கதிரைத் தெய்வத்துக்குப் பலியாக இடுதல் மரபு.)

Friday, September 12, 2014

குறுந்தொகை-104



தலைவி கூற்று
(தலைவன் நெடுங்காலம் பிரிந்து வாழ்வதில் பொறுக்கமுடியா தலைவி, “ பின்பனிப் பருவத்திற் பிரிந்த தலைவர் பலநாள் செல்லவும் மீண்டும் வந்திலர்; நான் எங்ஙனம் பொறுத்து கொள்வேன்!” என்று கூறியது.)

பாலை திணை- பாடலாசிரியர் காவன்முல்லைப் பூதனார்

இனி பாடல்-
 
அம்ம வாழி தோழி காதலர
   
நூலறு முத்திற் றண்சித ருறைப்பத்
   
தாளித் தண்பவர் நாளா மேயும்
   
பனிபடு நாளே பிரிந்தனர்

பிரியு நாளும் பலவா குவவே.

                  - காவன்முல்லைப் பூதனார்



உரை _

தோழி ஒன்று கூறுவேன் கேட்பாயாக! தலைவன் , நூலற்ற முத்துமாலையிலிருந்து தனித்து உதிர்கின்ற முத்துக்களைப்போல குளிர்ந்த பனித்துளிகள் துளிக்க, குளிர்ந்த தாளியறுகின் கொடியை விடியலில் பசுக்கள் மேயும் பனி விழும் காலத்திலே பிரிந்து சென்றார்.அங்ஙனம் பிரிந்து சென்று வாழ்ந்த நாட்களும் பலவாகின்றன.நான் அதை எப்படி பொறுப்பேன்.

 
    (கருத்து) தலைவர் காலமல்லாத காலத்திற் பிரிந்ததோடன்றிப் பல நாட்களாகியும் திரும்பிவரவில்லை.

(தாளிஅறுகு-ஒருவகைக் கொடி.பசு மேய்கையில் அறுகின் நுனியில் உள்ள பனித்துளிகள்)

   
   

Thursday, September 11, 2014

குறுந்தொகை-103




தலைவி கூற்று
(கூதிர்ப்பருவம் வந்தபின்பும் தலைவன் வராததால் துன்புற்ற தலைவி தோழியை நோக்கி, “இவ்வாடைக் காலத்திலும் மீண்டு வாராராயினர்; இனி யான் பிரிவு பொறுக்கமுடியாது உயிர் நீங்குவேன்” என்று கூறியது.)

நெய்தல் திணை- பாடலாசிரியர் வாயிலான் தேவன்

இனி பாடல்-

கடும்புன றொகுத்த நடுங்கஞ ரள்ளற்
   
கவிரித ழன்ன தூவிச் செவ்வாய்
   
இரைதேர் நாரைக் கெவ்வ மாகத்
   
தூஉந் துவலைத் துயர்கூர் வாடையும்

வாரார் போல்வர்நங் காதலர்
   
வாழேன் போல்வ றோழி யானே.

                   -வாயிலான் தேவன்
உரை-

(தோழி) மிக்க புனலால் தொகுக்கப்பட்ட நடுங்குவதற்கு ஏதுவாகிய துன்பத்தைத் தரும் சேற்றினிடத்து மீனாகிய உணவைத் தேடுகின்ற
முள்ளு முருங்கை மலரின் இதழைப்போன்ற மெல்லிய இறகையும், செம்மையாகிய அலகையும் உடைய நாரைக்கு துன்பம் உண்டாகும்படி தூவும் நீர்த்துளிகளையுடைய பிரிந்தார் துயரடையக் காரணமான வாடைக்காற்றையுடைய கூதிர் காலத்திலும் பிரிந்து சென்ற என் தலைவன் வரவில்லை.இனி நான் வாழ்வேனல்லேன்.


     (கருத்து) தலைவர் இன்னும் வாராமையின் துன்பம் மிகப் பெற்றேன்.


    ( “என்னுடன் தாம் சேர்ந்திருத்தற்குரிய இவ்வாடைக் காலத்திலும் தலைவர் வரவில்லை. இவ்வாடையின் துயர் பொறுத்தற்கு அரிதாயிற்று; அவருடைய பிரிவை இக்காலம் மிகுதியாகப் புலப்படுத்தி விட்டதாதலின் இனி உயிரை வைத்துக் கொண்டு ஆற்றும் ஆற்றல் இல்லேன்” என்று தலைவி கூறி வருந்தினாள்.)

Wednesday, September 10, 2014

குறுந்தொகை-102



தலைவி கூற்று
(தலைவன் பிரிந்து நெடுங்காலம் நீட்டித்தானாக அதனை உணர்ந்து அவனது பிரிவைத் தலைவி ஆற்றாளெனத் தோழி கூறியதையறிந்து அத்தலைவி ‘அவரை நினைந்து நினைந்து காமநோய் மிக்கு வருந்துகின்றேன்; அவர் தம் சொற்படி இன்னும் வந்திலர்’ என்று கூறியது.)

நெய்தல் திணி - பாடலாசிரியர் ஔவையார்

இனி பாடல்-
 
உள்ளி னுள்ளம் வேமே யுள்ளா
   
திருப்பினெம் மளவைத் தன்றே வருத்தி்
   
வான்றோய் வற்றே காமம்
   
சான்றோ ரல்லர்யா மரீஇ யோரே.

                    -ஔவையார்

உரை-

தலைவனை நினைந்தால் என் உள்ளம் வேவா நிற்கும்.நினைக்காமல் இருப்பது என்பது எனது ஆற்றலின் அளவிற்கு உட்பட்டதன்று.காம நோயால் என்னை வருந்தச் செய்வது, வானத்தைத் தோய்வது போன்ற பெருக்கத்தையுடையது
எம்மால் மருவப்பட்ட தலைவன் சால்புடையார் அல்லர்.


     (கருத்து) தலைவர் தம் சொற்படி மீண்டு வாராமையின் ஆற்றேனா யினேன்.

Tuesday, September 9, 2014

குறுந்தொகை - 101



தலைவன் கூற்று
(தலைவியோடு இன்புற்று இல்லறம் நடத்தும் தலைவன் அத் தலைவியினால் வரும் இன்பம் எப்பொருளினும் சிறப்புடையதென்று பாங்காயினார் கேட்பக் கூறியது.)

குறிஞ்சி திணை - பாடலாசிரியர்  மோவாய்ப்பதுமன்
இனி பாடல்-
 
விரிதிரைப் பெருங்கடல் வளைஇய வுலகமும்
 
அரிதுபெறு சிறப்பிற் புத்தே ணாடும்
 
இரண்டுந் தூக்கிற் சீர்சா லாவே
 
பூப்போ லுண்கட் பொன்போன் மேனி
 
மாண்வரி யல்குற் குறுமகள்
 
தோண்மாறு படூஉம் வைகலொ டெமக்கே.

                        - மோவாய்ப்பதுமன்


உரை-

விரிந்த அலையையுடைய பெரிய கடல் வளைந்த பூவுலக இன்பமும்,, பெறுதற்கரிய தலைமையையுடைய தேவருலக இன்பமும் ,
ஆகிய இரண்டும் தாமரைப் பூவைப் போன்ற மையுண்ட கண்களையும் , பொன்னைப் போன்ற நிறத்தையும் மாட்சிமைப்பட்ட பெண்ணழகையும் உடைய தலைவியினது தோளோடு தோள் மாறுபடத்தழுவும் நாளிற்பெறும் இன்பத்தோடு ஒருங்குவைத்து ஆராய்ந்தாலும் அவ்வைகலின்பத்தின் கனத்திற்கு ஒவ்வா.


     (கருத்து) தலைவி பெறுதற்கரிய சிறப்பினள்.

(தோள் மாறுபடுதலாவது ஒருவர் இடத்தோள் மற்றவர் வலத்தோளிலும் ஒருவர் வலத்தோள் மற்றவர் இடத்தோளிலும் பொருந்தத் தழுவுதல்.)

 

Monday, September 8, 2014

குறுந்தொகை- 100



தலைவன் கூற்று
(தலைவன் பாங்கனுக்கு, “நான் ஒரு மலைவாணர் மகளைக் காமுற்றேன்; அவள் பெறுதற்கரியள்” என்று கூறியது.)


 குறிஞ்சி திணை -பாடலாசிரியர் கபிலர்

இனி பாடல்-
 
அருவிப்பரப்பி னைவனம் வித்திப்
   
பருவிலைக் குளவியொடு பசுமரல் கட்கும்
   
காந்தள் வேலிச் சிறுகுடி பசிப்பிற்
   
கடுங்கண் வேழத்துக் கோடுநொடுத் துண்ணும்

வல்வில் லோரி கொல்லிக் குடவரைப்
   
பாவையின் மடவந் தனளே
   
மணத்தற் கரிய பணைப்பெருந் தோளே.

                              -கபிலர்

   உரை-

அருவு பாயும் பரந்த நிலத்தில் மலைநெல்லை விதைத்து, இடையில் களையாக முளைத்த பருத்த இலையையுடைய மலை மல்லிகையோடு, பசிய மரலை களைந்தெறியும் காந்தளையே இயற்கை வேலியாகயுடைய சிற்றூரிலுள்ளார்..உணவின்றி பசித்தாராயின் தறுகண்மையையுடைய யானையினது கொம்பை விற்று அப்பணத்தில் வரும் உணவை உண்ணுதற்கிடமாகிய வலிய வில்லையுடைய ஓரியினது கொல்லிமலையின் மேல்பக்கத்திலுள்ள பாவையைப்போல நான் கண்டு காமுற்ற மகள் மடப்பம் வரப்பெற்றாள் ஆயினும் அவளுடைய மூங்கிலைப் போன்ற பெரிய தோள்கள் தழுவதற்கு அரியனவாகும்.



    (கருத்து) என் மனங்கவர்ந்த தலைவி பெறுதற்கரியள்.

     (நான் அவளைக் கண்டு படும் துயரத்தை அறியாத ஒன்றும் அறியாத அவள் பெறுதற்கரியவள்)

Sunday, September 7, 2014

குறுந்தொகை - 99



தலைவன் கூற்று
( தலைவன் பொருளீட்டி மீண்டு வந்த காலத்து “நீர் பிரிந்தவிடத்து எம்மை நினைத்தீரோ?” என்று வினவ... தோழியிடம், “நான் எப்பொழுதும் நினைத்திருந்தேன்” என்று அவன் கூறியது.)

முல்லை திணை - பாடலாசிரியர் ஔவையார்

இனி பாடல்-
 
உள்ளினெ னல்லெனோ யானே யுள்ளி
   
நினைத்தனெ னல்லெனோ பெரிதே நினைத்து
   
மருண்டனெ னல்லெனோ வுலகத்துப் பண்பே
   
நீடிய மரத்த கோடுதோய் மலிர்நிறை

இறைத்துணச் சென்றற் றாஅங்
   
கனைப்பெருங் காம மீண்டுகடைக் கொளவே.

                    -ஔவையார்

உரை-

உயர்ந்த மரத்தினது கிளையைத் தொட்டு பெருகும் வெள்ளம், பிறகு கையால் இறைக்கும் அளவிற்கு சிறுகிச் சென்று இல்லாமல் ஆனது போல. வெள்ளத்தைப் போன்ற காம நோய், இங்கு நான் வருதலால் முடிவடையும் படி ஆழ்ந்து நினைத்தேன் அல்ல போலும்.அங்ஙனம் எண்ணி மீண்டும் மீண்டும் மிக நினைவு கொள்ளவில்லை போலும்.அங்ஙனம் நினைவு கூர்ந்து என் நினைவு நிறைவேறுவதற்கு மாறாக இருக்கும் உலக இயல்பை எண்ணி மயங்கினேன் போலும்.


 (கருத்து) யான் எப்பொழுதும் உங்களை நினைத்திருந்தேன்.

Saturday, September 6, 2014

குறுந்தொகை-98



தலைவி கூற்று
(தலைவன் தான் கூறிச்சென்ற பருவத்தில் வராததால் வருந்திய தலைவி, “யான் பசலையுற்ற நிலையையும் பருவம் வந்தமையையும் யாரேனும் தலைவரிடம் சென்று அறிவுறுத்தினால் நலமாகும்” என்று தோழிக்குக் கூறியது)

முல்லை திணை - பாடலாசிரியர் கோக்குளமுற்றன்

இனி பாடல்-

 
இன்ன ளாயின ணன்னுத லென்றவர்த்
   
துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே
   
நன்றுமன் வாழி தோழிநம் படப்பை
 
நீர்வார் பைம்புதற் கலித்த

மாரிப் பீரத் தலர்சில கொண்டே.

                      -கோக்குளமுற்றன்

உரை-

(தோழி) நம் தோட்டத்திலுள்ள நீர் ஒழுகுகின்ற பசிய புதரினிடத்தே தழைத்துப் படர்ந்த மழைக்காலத்தில் மலரும் பீர்க்கின் மலர்கள் சிலவற்றைக் கொண்டு தலைவரை நெருங்கச் சென்று நல்ல நெற்றியையுடைய தலைவி இம்மலரைப் போன்ற பசலையை அடைந்தாள் என்று அவரிடம் சொல்லுவாரைப் பெற்றால் மிக்க உதவியாக இருக்கும்.



    (கருத்து) நான் பசலை நோயடந்ததை தலைவர் அறிந்திலர்; அறியின்  வருவார் போலும்!



    (தலைவன் பொருளீட்டும் பொருட்டு பிரிந்துள்ளான். அவன் கூறிச் சென்ற கார்ப்பருவம் வந்தகாலத்தில் அவன் வராததால்  வருந்திய தலைவி “தலைவரது பிரிவினால் நான் பசலைபெற்றேன்; என் மேனி அழகு அழிந்தது. அவர் என் நிலையை அறியார் போலும்! யாரேனும் அவர் உள்ள இடத்திற்குச் சென்று ‘உன் பிரிவினால் தலைவி நலனிழந்து பசலையுற்றாள்; நீ கூறிய பருவமும் வந்தது’ என்று நினைவுறுத்தினால் அவர் விரைந்து வந்து மணந்து கொள்வார்” என்று கூறினாள்.)

Friday, September 5, 2014

குறுந்தொகை - 97



தலைவி கூற்று
(தலைவன் மணம் புரியாது நெடுநாள் இருப்பதால் வருந்திய தலைவி, “எம்முடைய நட்பினை யாவரும் அறிந்தனர்: இன்னும் தலைவர் மணக்கும் முயற்சியை மேற்கொண் டாரல்லர்” என்று கூறியது.)

நெய்தல் திணை - பாடலாசிரியர் வெண்பூதி

இனி பாடல்-
 
யானே யீண்டை யேனே யென்னலனே
   
ஆனா நோயொடு கான லஃதே
   
துறைவன் றம்மூ ரானே
   
மறையல ராகி மன்றத் தஃதே.

                      -வெண்பூதி

உரை-

நான் இவ்விடத்தில் தனியே இருக்கிறேன்.எனது பெண்மை நலம் என்னை நீங்கி அமையாத வருத்தத்துடன் கடற்கரைச் சோலையினிடத்தது,ஆயின் தலைவன் தனது ஊரில் இருக்கிறான்.எங்களது நட்புப் பற்றிய செய்தியானது பலர் அறிந்து பேசும்படியாக பொதுமன்றத்தில் பரவியுள்ளது.


 
  (கருத்து) என் நலனுண்ட தலைவர் இன்னும் என்னை மணக்க  முயற்சியைச் செய்தாரல்லர்.

 


Thursday, September 4, 2014

ஆறடியும் சொந்தமில்லை

                                     

பத்து கால்களுடன் வந்து

தீப் படுக்கையில்

போடப்பட்டு

ஒரு மண்பாத்திரத்தில்

அடங்கிடும் சாம்பலாய்

எப்பேர்பட்டவன் வாழ்வும்

அதற்குள்..

எத்தனை எத்தனை

ஆணவம்..பழிவாங்கல்

கொடூர புத்தி..

வேணாமே இது..

வாழும் வரை

நல்லவனாய் வாழ்ந்திடுங்களேன்

அப்பேராவது நிலைக்கட்டுமே!


குறுந்தொகை -96




தலைவி கூற்று
(தலைமகன் ம்ணக்காமல் வந்து பழுகிய காலத்தில் அவனைத் தோழி தலைவனின் இயல்பை பழித்தாளாக, அது கேட்ட தலைவி தோழியைச் சினந்து கூறியது.)

குறிஞ்சி திணை- பாடலாசிரியர் அள்ளூர் நன்முல்லை

இனி பாடல்-
 
அருவி வேங்கைப் பெருமலை நாடற்
   
கியானெவன் செய்கோ வென்றி யானது
   
நகையென வுணரே னாயின்
   
என்னா குவைகொ னன்னுத னீயே.

                     -அள்ளூர் நன்முல்லை



 உரை-
நல்ல நெற்றியையுடையாய்...அருவியினதருகில் வளர்ந்த வேங்கை மரங்களையுடைய பெரிய மலையையுடைய நாட்டிற்குரிய தலைவனை நான் என் செய்வேன் என்று கூறி அவன் இயல்பை பழித்தாய்.அப்படி நீ கூறியதை நான் விளையாட்டாய் எடுத்துக் கொண்டேன்..இல்லாவிடில் நீ (என்னிடம்) என்ன பாடு படுவாய். (மிகவும் துன்பப்படுவாய்)



     (கருத்து) நீ தலைவனை இயற்பழித்தல் தகாது.

 

Wednesday, September 3, 2014

குறுந்தொகை - 95



தலைவன் கூற்று
(தனது வேறுபாடு கண்டு வினாவிய பாங்கனுக்கு(தோழனுக்கு), “ஒரு குறமகளிடம் கொண்ட காமத்தால் என்னிடம் மாற்றம் உண்டாயிற்று” என்று தலைவன் கூறியது.)

குறிஞ்சி திணை- பாடலாசிரியர் கபிலர்

இனி பாடல்-
   
மால்வரை யிழிதருந் தூவெள்ளருவி
   
கன்முகைத் ததும்பும் பன்மலர்ச் சாரற்
   
சிறுகுடிக் குறவன் பெருந்தோட் குறுமகள்
   
நீரோ ரன்ன சாயல்

தீயோ ரன்னவென் னுரனவித் தன்றே.

                           கபிலர்

உரை_

பெரிய மலையினிடத்து வீழும் அருவி பாறைகளின் வெடிப்புகளில் ஒலிக்கும், பல மலரையுடைய சாரலில் உள்ள சிற்றூரிலுள்ள குறவனுடைய பெரிய தோளையுடைய சிறிய மகளினது நீரைப் போன்ற மென்மை, தீயையொத்த என் வலியைக் கெடச் செய்தது.
  .


 .(கருத்து) நான் ஒரு மலைவாணர் மகளைக் காமுற்றேன்.

Tuesday, September 2, 2014

குறுந்தொகை - 94



தலைவி கூற்று
(தலைவன் மீள்வதாகக் கூறிச்சென்ற கார்ப்பருவம் வந்ததையறிந்த தோழி, ‘தலைவி இதுகண்டு ஆற்றாள்’ என வருந்தினாளாக அதனையறிந்த தலைவி, “இன்னும் கார்ப்பருவம் வரவில்லை; ஆயினும் மேகம் முழங்கு கின்றது; நான் ஆற்றுவேன்; தலைவர் இது கேட்டு வினைமுடியாமல் மீள்வரோவென்றே அஞ்சினேன்” என்று கூறியது.)

முல்லை திணை - பாடலாசிரியர்

இனி பாடல் -

.  
பெருந்தண் மாரிப் பேதைப் பித்திகத்
   
தரும்பே முன்னு மிகச்சிவந் தனவே
   
யானே மருள்வேன் றோழி பானாள்
   
இன்னுந் தமியர் கேட்பிற் பெயர்த்தும்

என்னா குவர்கொல் பிரிந்திசி னோரே
   
அருவி மாமலைத் தத்தக்
   
கருவி மாமழைச் சிலைதருங் குரலே.

                       -கந்தக் கண்ணன்

உரை-

(தோழி) பெரிய தண்மையையுடைய மழைகாலத்துக்குரிய அறிவின்மையையுடைய பிச்சியின் அரும்புகள் தாம் சிவக்க வேண்டிய காலத்திற்கு முன்பே மிகச் சிவந்தன.அவற்றைக் கண்டு இது கார்ப் பருவமென்று நானா மயங்குவேன்? மயங்கேன்.ஆயினும், என்னைப் பிரிந்தவராகிய இன்னும் என்னிடம் வந்து சேராமல் இருக்கும் தலைவர் அருவியானது பெரிய மலையிலே தத்தி வீழும்படி தொகுதியாகிய பெரிய மேகத்தினது முழங்கும் ஓசையை நடுஇரவில் கேட்டால் தான் பிரிவினால் வருந்துவதன்றி மீண்டும் எந்த நிலையை உடையவராவாரோ?


   (கருத்து) தலைவர் இம்மேக முழக்கத்தைக் கேட்டு வினைக்குறை முடியாமல் மீள்வாரோ?

Monday, September 1, 2014

குறுந்தொகை- 93


தலைவி கூற்று
(விலைமகளிடம் இருந்து பிரிந்து வந்த தலைமகனுக்குத் தூதாக வந்து, “நீ கோபப்படாதே!; அவர் அன்புடையார்” என்ற தோழிக்கு, “அவர் நம்மால் உபசரித்து வழிபடற்குரியவரே யன்றி அளவளாவி மகிழ்தற்குரியர் அல்லர்” என்று தலைவி கூறியது.)

மருதம் திணை - பாடலாசிரியர் நன்முல்லையார்

இனி பாடல்-

நன்னலந் தொலைய நலமிகச் சாஅய்
   
இன்னுயிர் கழியினு முரைய லவர்நமக்
   
கன்னையு மத்தனு மல்லரோ தோழி
   
புலவியஃ தெவனோ வன்பிலங் கடையே.


                            -அள்ளூர் நன்முல்லையார்.

உரை _ (தோழி) நல்ல பெண்மை நலம் கெடவும், மேனியழகு மெலியவும், எல்லாவற்றினும் இனிய உயிர் நீங்கினாலும், அவர் பற்றி பரிவு ஏற்படும் சொற்களை சொல்லாதே!தலைவர் நமக்கு அன்னையும், தந்தையும் ?அல்லரோ!
 தலைவன் தலைவியரிடத்து அன்பு இல்லா இடத்தில் ஊடல் எதன் பொருட்டு?
 

(கருத்து) தலைவன் என்பால் மனைவியென்னும் கருத்துடன் அன்பு புரிந்தானல்லன்.

    (வி-ரை.) நலம் இரண்டனுள் முன்னது பெண்மை நலம்; இரண்டாவது அழகு.

 அவரை ஏற்றுக்கொள்ளல் வேண்டும்” என்று தோழி கூற, “என்னுடைய நலமும் உயிரும் தொலையுமேனும் பொறுத்துக்கொண்டு அவரை ஏற்றுக்கொள்ளல் என் கடன்; அவர் அன்னையையும் அத்தனையும் போல உபசரிக்கத்தக்கவர்; ஆயினும் தலைவராகக் கருதி அளவளாவுவதற்குரிய அன்பு அவர்பால் இல்லை; என தலைவி கூறினாள். இவ்வயன்மைக் குறிப்பினால் வாயில் மறுத்தாளாயிற்று