Saturday, August 23, 2014

குறுந்தொகை - 86


தலைவி கூற்று
(தலைவனது பிரிவைத் தலைவி ஆற்றாளெனக் கவலை உற்ற தோழியை நோக்கி, “தலைவர் என்னோடு இருந்து இன்புறுதற்கு உரிய பொழுதாகிய இக்கூதிர் காலத்திலே தனிமைத்துன்பத்தை மிகுதிப்படுத்தும் ஆன்மணிக்குரலைக் கேட்பார் வேறு யாருளர்? நான் ஒருத்தியேயன்றோ?” என்று தலைவி கூறியது.)


குறிஞ்சி திணை - பாடலாசிரியர் வெண்கொற்றன்

இனி பாடல்
 
சிறைபனி யுடைந்த சேயரி மழைக்கட்
   
பொறையரு நோயொடு புலம்பலைக் கலங்கிப்
   
பிறருங் கேட்குந ருளர்கொ லுறைசிறந்
   
தூதை தூற்றுங் கூதிர் யாமத்

தானுளம் புலம்புதொ றுளம்பும்
   
நாநவில் கொடுமணி நல்கூர் குரலே.


                          -வெண்கொற்றன்.

  உரை -

மழைத்துளி மிக்க, வாடைக்காற்று வீசித் தூவுகின்ற கூதிர்ப்பருவத்தின் நள்ளிரவில் எருதானது ஈ ஒலிக்குந் தோறும் அலைகின்ற (தலையாட்டுதலால்)நா வினால் முழங்குகின்ற கொடிய மணியின் மெல்லிய ஓசையை தடுக்கப்பட்ட நீர் உடைந்து துளித் துளியாக விழுகின்ற செம்மையான அரிகளையும்   குளிர்ச்சியையுடைய கண்ணோடும், பொறுத்தற்கரிய காமநோயோடும் தனிமை வருத்துதளாற் கலங்கி கேட்டு வருந்துவார் என்னையன்றிப் பிறமகளிரும் உள்ளனரோ?

(கூதிர் கலம்
 _ஐப்பசி, கார்த்திகை)

  (கருத்து) தலைவர் உடனிருத்தற்குரிய இப்பருவத்தில் நானொருத்தியே தனிமைத் துன்பத்தை உடையேன் ஆயினேன்.

No comments: