Tuesday, August 19, 2014

குறுந்தொகை - 82


தலைவி கூற்று
(தலைவன் தான் வருவதாகக் கூறிச் சென்ற முன்பனிப் பருவம் வரவும் அவன் வாராமையினால் வருத்தமுற்ற தலைவியை நோக்கி, “நீ வருந்தற்க; அவர் தலையளி செய்து பிரிந்த அன்புடையவராதலின் விரைவில் வருவர்” என்ற தோழியை நோக்கி, “அவர் முன்பு அன்புடையராயினும் இப்பொழுது வந்திலராதலின் அவர் தன்மை மாறியது போலும்!” என்று தலைவி கூறியது.)

குறிஞ்சி திணை- பாடலாசிரியர் கடுவன் மள்ளன்

 இனி பாடல்-

   
வாருறு வணர்கதுப் புளரிப் புறஞ்சேர்
   
பழாஅ லென்றுநம் மழுதகண் டுடைப்பார்
   
யாரா குவர்கொ றோழி சாரற்
   
பெரும்புனக் குறவன் சிறுதினை மறுகாற்

கொழுங்கொடி யவரை பூக்கும்
   
அரும்பனி யச்சிரம் வாரா தோரே.

                      - கடுவன்மள்ளன்

உரை -

(தோழி)மலைப்பக்கத்திலுள்ள பெரிய தினைப்புனத்திலுள்ள குறவனது, சிறிய தினையரிந்த மறு காலிடத்தில் கொழுவிய அவரைக்கொடி மலர்கின்ற, பொறுத்தற்கரிய பனியையுடைய அச்சிரக் காலத்திலும் வராத தலைவர் நீட்சியையுடைய வளைந்த கூந்தலை வகிர்ந்து முதுகைச் சார்ந்து ,அழுதலையொழியெனக் கூறி என் அழுத கண் துடைப்பார் முன்பு.இப்பொழுது, எப்படிப்பட்டவராய் இருக்கிறாரோ!


    (கருத்து) தலைவர் முன்பு அன்புடையராயினும் இப்பொழுது அன்பின்றி என்னை மறந்தனர் போலும்!

    (வி-ரை.) தான் பிரியுங்கால் தலைவி வருந்துதலை அறிந்த தலைவன் அவள் கூந்தலை உளரியும் கண்ணீரைத் துடைத்தும் தலையளி செய்து பிரிந்தானாதலின் அச்செயல்களை நினைந்து, “அங்ஙனம் செய்த தலையளியை யுடையார் இன்னும் வாராமல் புறக்கணிக்கிறாரே!!” என்று வருந்தினாள். தோழி, தலைவன் பிரியுங்கால் செய்த தலையளியை நினைவுறுத்தி வற்புறுத்தினாளாக, “அங்ஙனம் செய்யினும் இப்பொழுது வாராமையால் அவர் தன்மை வேறுபட்டது போலும்!” என்னும் கருத்துப் படக் கூறினாள்.

    யாரென்றது நம்மோடு தொடர்பிலரென்னும் நினைவிற்று. குறவனுக்குரிய சிறுதினை, தினைக்கதிரை அரிந்தபின் அதன் அடியில் மீட்டும் கிளைத்துக் கதிர் உண்டாகும்; அதனை மறுகாலென்பர்; அம்மறுகாலில் விதைத்த அவரை வளர்ந்தது.
    தலையளி என்பது..முகமலர்ந்து, அன்பு வார்த்தைக் கூறுதல்

No comments: