Tuesday, August 5, 2014

குறுந்தொகை - 67


தலைவி கூற்று
(தலைவனது பிரிவை ஆற்றாத தலைவி தோழியை நோக்கி, "பிரிந்து சென்ற தலைவர் என்னை நினைக்கவில்லையா?நினைத்திருந்தால் வந்திருப்பாரே! என்று கூறியது)

பாலைத் திணை - பாடலாசிரியர் அள்ளூர் நன்முல்லை

இனி பாடல் -


உள்ளார் கொல்லோ தோழி கிள்ளை
 
வளைவாய்க் கொண்ட வேப்ப வொண்பழம்
 
புதுநா ணுழைப்பா னுதிமாண் வள்ளுகிர்ப்
 
பொலங்கல வொருகா சேய்க்கும்

நிலங்கரி கள்ளியங் காடிறந் தோரே.

                    -அள்ளூர் நன்முல்லை

உரை-

(தோழி) கிளி வளைந்த அலகினிடத்திலே கொண்ட வேம்பினது ஒள்ளிய பழமானது, புதிய பொற்கம்பியை ஊடு செலுத்தும் பொற்கொல்லனது, முனை மாட்சிமைப்பட்ட கூரிய கைந்நகத்திற் கொண்ட பொன்னாபரணத்திற்குரிய ஒரு காசு போல இருக்கும் நிலம் கரிந்துள்ள கள்ளியையுடைய பாலை நிலத்தை கடந்து சென்றதலைவர் என்னை நினைக்கமாட்டாரோ?!


 

    (கருத்து) தலைவர் என்னை மறந்தனர் போலும்!

    (வி-ரை.) கிளியின் அலகுக்குக் கைவிரல் நகங்களும், வேப்பம் பழத்திற்கு உருண்டையான பொற்காசும் உவமைகள்.


No comments: