Thursday, July 24, 2014

குறுந்தொகை - 53



தோழி கூற்று
(தலைவன் தலைவியை மணப்பேன் என்ற உறுதிமொழி கூறிய பின்பும் நெடுங்காலம் கழிந்தது கண்டு தலைவி வருந்துதலை யறிந்த தோழி தலைவனை நோக்கி, “நீ கூறிய உறுதிமொழிகள் எம்மை வருத்தின; அவை பிறழாமல் நீ இனி விரைவில் மணந்துகொள்ள வேண்டும்” என்று கூறியது.)

மருதம் திணை - பாடலாசிரியர் கோப்பெருஞ்சோழன்

இனி பாடல்-

எம்மணங் கினவே மகிழ்ந முன்றில்
   
நனைமுதிர் புன்கின் பூத்தாழ் வெண்மணல்
   
வேலன் புனைந்த வெறியயர் களந்தொறும்
   
செந்நெல் வான்பொரி சிதறி யன்ன

எக்கர் நண்ணிய வெம்மூர் வியன்றுறை
   
நேரிறை முன்கை பற்றிச்
   
சூரர மகளிரொ டுற்ற சூளே.

                       -கோப்பெருஞ்சோழன்.


உரை-.
தலைவனே! முன்னிடத்திலுள்ள அரும்பு முதிர்ந்த புன்னை மரத்தின் மலர்கள் , உதிர்ந்து பரந்து தங்கிய வெள்ளிய மணற்பரப்பினது வேலனால் அமைக்கப்பட்ட வெறியாட்டு எடுக்கும் இடந்தோறும் செந்நெல்லின் வெள்ளிய பொரி சிதறினாற் போன்ற தோற்றத்தைத் தரும் மணல்மேடுகள் பொருந்திய எம்முடைய ஊரிலுள்ள அகன்ற நீர்த்துறையில் நுண்ணிய மூட்டுவாயையுடைய முன் கையைப் பிடித்து தெய்வமகளிரை சுட்ட்க் கூறிய சத்தியம் எம்மைத் துன்புறுத்தின.

(கருத்து) நீ உன் உறுதிமொழிக்கேற்ப விரைவில் மணம் செய்து கொள்ள வேண்டும்.



காதலன், காதலியை மணப்பதாக வாக்குக் கொடுத்து நீண்ட நாள் ஆகிறது.ஆகவே விரைவில் மணம் செய்துகொள்ள வேண்டும் என தோழி உரைக்கிறாள்.

புன்னைமலர்,வெள்ளிய மணற்பரப்பு..நெல்லின் வெள்ளிய பொரி சிதறினாற் போல  மணல் மேடாம்....என்ன ஒரு அற்புத கற்பனை.இப்பாடலின் சிறப்பு அதுதான்.

No comments: