Saturday, June 21, 2014

குறுந்தொகை - 18



குறிஞ்சித்திணை - பாடலாசிரியர் கபிலர்

(இரவுப் பொழுதில் தலைவனும் தலைவியும் சந்திக்கத் திட்டமிட்டுள்ள இடத்தில். தலைவியைச் சந்தித்துப் பிரியும் தலைவனிடம்,  தலைவியின் வருத்த நிலையைச் சொல்லி அவளை விரைந்து மணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்துகின்றாள் தோழி)

வேரல் வேலி வேர்கோட் பலவின்
சாரல் நாட! செவ்வியை ஆகுமதி
யார்அஃது அறிந்திசினோரே? சாரல்
சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கு இவள்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே!

                         - கபிலர்



செய்யுள் உரை-

மூங்கில்களை வேலியாகக் கொண்ட,   வேரில் குலைகளையுடைய பலா மரங்கள் நிறைந்திருக்கும் மலைப்பக்கத்து நாடனே!  மலைச் சாரலில் வளரும் மரத்தின் சிறிய கொம்பில், பெரிய பழம் தொங்குவது போல,  இவளது உயிர் ஆகிய கொம்பு வலிமையற்றுச் சிறியதாய் உள்ளது;  ஆனால் இவளின் காமநோய் என்னும் பழமோ மிகவும் பெரியதாய் உள்ளது. இவ்வுண்மையை உன்னையன்றி வேறு யார் அறிவார்?


சிறிய கொம்பில் பெரிய பழம் தொங்குவது போல..தலைவியின் உயிர்  சிறிய கொம்பாம்(வலிமையில்லாததாம்).பெரிய பழம் போல காமநோய் உள்ளதாம்.உவமைகளை ரசிப்போமாக

1 comment:

ஹ ர ணி said...

அன்புள்ள..

வணக்கம். குறுந்தொகை நல்ல முயற்சி. ஆனால் உரையில் உள்ள பாட்ல் பொருளை அப்படியே கொடுபப்தால் என்ன பயன? நீங்கள் பாடலைப் புரிந்துகொண்ட அனுபவத்தை பாடலின் பொருளோடு அனுபவிக்கத் தாருங்கள்.

கபிலரின் இது ஓர் அறபுதமான பாடல். சுவையான பாடல். பொருட்சுவையும் கற்பனையும் பாடலின் நுடபமும் வெகு இன்பமானது.

நன்றி.