Tuesday, October 23, 2012

யாரிடத்து போயுரைப்பேன் -கலைஞர்





உள்கட்சி சண்டையால் நான் நிம்மதி இழந்திருக்கிறேன் என்று திமுக தலைவர் கருணாநிதி வேதனை தெரிவித்துள்ளார்.

திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர். பாலு மீது அக்கட்சியின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளரும், மத்திய இணை அமைச்சருமான பழனிமாணிக்கம் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் திமுக தொண்டர்களுக்கு "நீர் இடித்து நீர் விலகுவதா' என்ற தலைப்பில் திங்கள்கிழமை எழுதிய கடிதத்தில் கருணாநிதி கூறியிருப்பதாவது:

எதிர்க்கட்சியாகக் கூட வர முடியாத அளவுக்கு தோல்வி அடைந்தாலும் துவண்டு விடாமல் 89 வயதில் நானும், 90 வயதில் பொதுச்செயலாளர் அன்பழகனும் கட்சிக்காக தினமும் உழைக்கிறோம்.

திமுகவினர் குழு சேர்த்துக் கொண்டு மோதிக் கொள்கிறார்கள் என்ற செய்திதான் என்னை பெரிதும் வருந்தச் செய்கிறது. 1967-ல் திமுக ஆட்சிக்கு வந்தபோது, ஆட்சி வந்து விட்டது, கட்சி போச்சே என்றார் அண்ணா. அதனை இப்போது அனுபவரீதியாக உணர்கிறேன்.

கட்சியினருடன் பேசிவிட்டு இரவு 11 மணிக்கு உறங்கச் சென்றால் உள்கட்சியை அரித்து வரும் இத்தகைய குழுக்கள் பற்றிய வேதனைதான் என்னை சூழ்ந்து கொள்கிறது. தூங்க விடாமல் செய்கிறது.

மத்திய இணை அமைச்சர் பழனிமானிக்கம் சனிக்கிழமை (அக்டோபர் 20) அளித்த பேட்டி குறித்து அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவனும், முரசொலி செல்வமும் கூறியவுடன், இன்றிரவு என் தூக்கம் போச்சு என்றுதான் கூறினேன். அதுபோலவே இரவு முழுவதும் நான் உறங்கவில்லை.

அண்ணா சொன்ன குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பது மறந்துவிட்டதா? தஞ்சாவூர் மாவட்டத்தில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையை சரி செய்ய நானும், அன்பழகனும் இரண்டு மணி நேரம் செலவிட்டோம். அப்போது பேசிய துரைமுருகன், தஞ்சை மாவட்டம் தலைவரின் (கருணாநிதி) நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் மாவட்டம். அங்கு அவர் கூறுவதுதான் வேதவாக்கு. அங்கு குழு உருவாகலாமா என்று கண்ணீர் மல்க கேட்டாரே? அந்த மாவட்டத்திலா இந்த தலைகுனிவு?

இரண்டு நாள்களுக்கு முன்பு என்னைச் சந்தித்த பழனிமாணிக்கம், அவரது தொகுதியில் நடப்பதைப் பற்றி சொன்னார். பொறுத்திருங்கள். தலைமைக்கு புகாராக எழுதிக் கொடுங்கள் என்றேன். அதற்குள் என்ன அவசரம்? எதற்காக இந்தப் பேட்டி? நான் அனைவருடனும் அன்புடன் பழகுகிறேன் என்பதை பலவீனமாக எடுத்துக் கொண்டு எது வேண்டுமானாலும் செய்வதா? நான் அனைத்தையும் மன்னித்து விடுகிறேன். மறந்து விடுகிறேன் என்பதற்காக எதையும் செய்யத் துணிவதா?

எதிர்க்கட்சிகளிடம் இருந்து கட்சியைக் காப்பாற்றுவதா அல்லது நமக்குள் நிலவும் குழு பேதத்தை போக்குவதா? இலையில் நிறைய பண்டங்களைப் பரிமாறிவிட்டு ஒரு ஒரத்தில் சாணத்தை வைப்பதற்கு பெயர் விருந்தோம்பலா? எதற்காக நான் இருக்கிறேன்? எதற்காக தலைமை இருக்கிறது? மாவட்டத்துக்கு மாவட்டம் இது போன்றதொரு நிலைமை உருவானால் அதற்கு எங்கே எல்லை?

மனசாட்சி உறுத்தியதால் பேட்டி கொடுத்த இரவே பழனிமாணிக்கம் என்னைச் சந்தித்து விளக்கம் அளித்தார். டி.ஆர். பாலுவும், பழனிமாணிக்கமும் ஒரே மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் டி.ஆர். பாலுவை மேற்கு வங்க மாநில எம்.பி.க்கள் தாக்க வந்தபோது 5-வது வரிசையில் இருந்த பழனிமாணிக்கம் முதல் வரிசைக்கு ஒடி வந்து தடுத்தார். அந்த உணர்வு இன்று எங்கே போய்விட்டது?

பழனிமாணிக்கத்தை தாக்க யார் முற்பட்டாலும், ஓடிவந்து பாதுகாக்க கூடியவர் பாலு.

ஊரிடத்து பகை என்றால் உறவிடத்து போயுரைப்பேன். உறவிடத்தே பகை என்றால் என்ற நிலையில் யாரிடத்து போயுரைப்பேன் நான் நிம்மதி இழந்திருக்கிறேன்'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.

டிஸ்கி-  கலைஞரும்...இப்படி சொல்லியிருக்க வேண்டாமே...மூன்றாம் நபருக்குத் தெரியாமல்..உட்கட்சி பேச்சு வார்த்தையில் இப்பிரச்னையை தீர்த்திருக்கலாம்.
        என் காங்கிரஸ் நண்பன் ஒருவன் கோஷ்டி பற்றி...நீங்கள் பேசாதீர்கள் என்கிறான் என்னிடம்.

No comments: