Sunday, January 31, 2010

தமிழ்(ப்)படம்...இது விமரிசனமல்ல


வலைப்பூ நண்பர்கள் கிட்டத்தட்ட ஒரு மித்த பாராட்டுகளுடன்..சமீப காலங்களில் விமரிசித்துள்ள ஒரு தமிழ் படம்..'ப்' உண்டா இல்லையா என்று இவர்கள் தீர்மானம் செய்யவே நீண்ட நாட்கள் யோசித்திருப்பார்கள் போலும்..இப்படம் வெளியாகியுள்ள அனைத்து திரையரங்கிலும்..அரங்கு நிறைந்த காட்சிகளாகவே இப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது.கழகக் கண்மணிகளுடன் சேர்ந்து நாமும் இப்படத்தை ஒரு வெற்றி படமாக்குவோம்.இது ஒரு ஸ்பூஃப்படமாம் :-))

மல்லாக்கப் படுத்துக் கொண்டு..காரி உமிழ்ந்திருக்கிறார்கள்.

ஆரம்பம் முதல் இறுதிவரை சிரிப்பு..சிரிப்பு..சிரிப்புதான்..ஓவர்டோஸ் என்று கூட சொல்லலாம்.ஆடையின்றி போவோரைக் கூட பார்த்து சிரிப்பவர்கள் நாம்.

சாதாரணமாகவே..ஒருவர் தெருவில்..வாழைப்பழத்தோலால் வழுக்கி தெருவில் விழுந்தால் கூட..சாதாரண மனிதன் முதலில் சிரிப்பான்..பின்னர்தான் அடிப்பட்டவனுக்கு உதவப் போவான்.கிட்டத்தட்ட இப்பட இயக்குநர் அந்த வேலையைத் தான் செய்துள்ளார்.தமிழ்ப் பட உலகின்..லாஜிக் பற்றி கவலைப் படாத போக்கைக் காட்டி..நம்மை சிரிக்க வைத்திருக்கிறார்.அப்படிப் பார்த்தால்..பெரும் பொருட்செலவில் தயாரிக்கப் படும்..பிரம்மாண்டப் படங்கள், அவை எந்த மொழிப் படங்களாக இருந்தாலும்..அவற்றுள் லாஜிக் இருக்கிறதா?

அமுதனின் இப்போக்கு கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கல்லெறிவதற்கு சமம்.

முற்றிலும் மாறுபட்ட கதை அமைப்புக் கொண்ட..லாஜிக்குடன் ஒரு வெற்றி படத்தை..அமுதன் கொடுத்து விட்டு..அடுத்து இப்படி ஒரு படம் கொடுத்திருந்தால் கூட ரசித்திருக்கலாம்.அதைவிடுத்து..எல்லோருக்கும் தெரிந்தவற்றையே..அவர் சார்ந்துள்ள துறை பற்றி..கிண்டலுடனும்..கேலியுடனும் சொல்வதை என்னால் ரசிக்க முடியவில்லை.

பார்ப்போம்..அடுத்து இந்த அமுதன் என்ன செய்யப் போகிறார் என்று.

Saturday, January 30, 2010

வாய் விட்டு சிரியுங்க..


1.ஊர்ல இருந்து உங்க மாமனார் வர்றதா கடிதம் வந்திருக்குன்னு சொல்றியே..உங்கப்பா ன்னு சொல்லக்கூடாதா?
உங்க சொந்தக்காரர்களைத்தானே உங்களுக்கு பிடிக்கும்.

2.என் கணவர் நடுராத்திரி வந்த திருடனை பிடிச்சுட்டார்...
நடு இரவில் அவர் எப்படி முழிச்சுக்கிட்டு இருந்தார்?
பகலில்தான் ஆஃபீஸ்ல தூங்கிடறாரே!

3.நீதிபதி- (குற்றவாளியிடம்)இந்த திருட்டு குற்றத்திற்கு உனக்கு 10000 ரூபாய் அபராதம் விதிக்கிறேன்..,கட்டத் தவறினால் ஒரு ஆண்டு சிறை தண்டனை
குற்றவாளி-என்னை ஒரு மணி நேரம் வெளியே விடுங்க..அபராதத்தை கொண்டு வந்து கட்டிடறேன்.

4.நோயாளி-(டாக்டரிடம்)டாக்டர் இந்த ஆபரேஷன்ல நான் பிழைப்பேனா?
டாக்டர்-கவலைப்படாதீங்க..உங்களுக்கு செய்யப்போற ஆபரேஷன் புள்ளி விவரப்படி ..பத்தில் ஒருவர் பிழைச்சுப்பாங்களாம்..இது எனக்கு பத்தாவது ஆபரேஷன்..அதனால நீங்க
பிழைச்சுடுவீங்க

5.தந்தை(மகனிடம்) சில்லறை இல்லாம..பஸ்ல வராம...நடந்து வர்றியா?நான்தான் உன் கிட்ட இரண்டு ரூபாய் காயின் கொடுத்தேனே
மகன்-ஆனா..பஸ்ல கண்டக்டர்...இரண்டு ரூபாய் சில்லரையா இல்லாதவங்க ஏறாதீங்கன்னு சொன்னார்.

6.கிரேசி மோகன் எழுதறாப்போல பல காமடி சப்ஜெக்ட் வைச்சிரிக்கேன்..ஆனா ..எழுதத்தான் சோம்பலா இருக்கு..
அப்போ நீங்க லேசி மோஹன்னு சொல்லுங்க.

Friday, January 29, 2010

நான் இந்தியன்



குடியரசு தினம்

சுதந்திர நாள்

கிரிக்கெட்

இவை மூன்று மட்டுமே

நான் இந்தியன் எனும்

நினைவை ஞாபகப்படுத்துகிறது

மாநில மொழி

வெறியர்களுக்கு

2) வியர்வை முத்து சிந்தி

விவசாயி விளைவித்த நெல் முத்துக்கள்

பண்ணை வீட்டு பத்தாயத்தில்

3)கவர்ச்சி காட்டி நடிகை

ஆண்களின்

உள்ளாடை விளம்பரத்தில்

4) பொழுது போக

வாங்கிய தொலைக்காட்சி

தொல்லைக்காட்சியாய்

பொழுதை விழுங்கிக் கொண்டிருக்கிறது

Thursday, January 28, 2010

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்(29-1-10)

நமது உடலில் ஏழு வகை சுரப்பிகள் வெளியிடும் திரவம் ரத்தத்தில் கலந்து வாதம்,பித்தம்,சிலேத்துமம் ஆகிய மூன்று நாடிகளை இயக்குகிறது.இதன் மூலம் உடலுக்குத் தேவையான புரதம்,கொழுப்பு,மாவு சத்துகளை சமப்படுத்தி..சீரான வெப்ப நிலையில் நமது உடலை ஆரோக்கியமாக பாதுகாத்து வருகிறது.

2)ஜோதி பாசுவின் மறைவிற்குப் பின் 1964ல் மார்க்சிஸ்ட் கட்சியை உருவாக்கிய அத்தனை பொலிட் பீரோ உறுப்பினர்களையும் அக்கட்சி இழந்து விட்டது.23 ஆண்டுகள் முதல்வராய் இருந்த பாசு அதிகாரத் தோரணையோ..மமதையோ இல்லாதவராகத் திகழ்ந்தார்

3)ஒவ்வொன்றிற்கும் ஒரு சீசன் உண்டு.மாம்பழ சீசன்,பண்டிகை சீசன்,ஆடித் தள்ளுபடி சீசன்,சங்கீத சீசன் இப்படி..ஆனால் ஆண்டவனுக்கு சீசன் என்று நாம் கேள்விப் பட்டதில்லை.அதையும் சமீபத்தில் வந்த பத்திரிகை செய்திகள் சொல்லி விட்டன.சபரிமலை சீசனில் வசூலான உண்டியல் தொகை 119 கோடி ரூபாய் என்று செய்தி வெளி வந்துள்ளது.

4)இதுவரை இவர் 28 முறை சிறை சென்றுள்ளார்..நான்காண்டு காலம் சிறையில் கழித்துள்ளார்.அதிகக் காலம் சிறையில் இருந்த திராவிட இயக்கத் தலைவர் இவர் ஒருவரே! அவர் தான் வைகோ ஆவார்

5)ஒவ்வொரு குடியரசு தினத்திற்கும் சிறந்த தொண்டாற்றியவர்களுக்கு 'பத்ம' விருதுகள் வழங்குகிறது.இப்படிப்பட்ட விருதுகள் 1954 முதல் இந்திய அரசு வழங்கி வருகிறது.முதன் முதலில் ராஜாஜி,குடியரசு துணைத் தலைவராய் இருந்த ராதாகிருஷ்ணன்,சி.வி.ராமன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

6) ஒரு ஜோக்..

தலைவர்- அடடா..என்ன வெயில்....தாங்க முடியல
நிருபர்- அப்போ..உங்களுக்கு பிடித்த பருவம் எது
தலைவர்-16 வயது முதல் 24 வயது வரை

Wednesday, January 27, 2010

திருமணங்களும்..அழைப்பிதழ்களும்

நம் வீட்டுத் திருமணங்களுக்கு நெருங்கிய உறவினர்களையும்...நம் நண்பர்களையும் அழைப்பதில் தவறில்லை.ஆனால் அதிகம் அறிமுகம் இல்லாத..அல்லது..திருமணமாகும் மணமகள் குடும்பத்திற்கோ,மணமகன் குடும்பத்திற்கோ சற்றும் தெரியாத ஒருவருக்கு அழைப்பிதழ் கொடுப்பது வீண் என்றே எண்ணுகிறேன்.

உதாரணத்திற்கு..சென்ற வாரம் என் நண்பர் ஒருவர்..அவரது தம்பி மகள் திருமணத்திற்கு எனக்கு அழைப்பிதழ் கொடுத்திருந்தார்.எனக்கு அவரது தம்பியையோ..அவர் குடும்பத்தினரையோ தெரியாது.

ஆயினும்..அழைப்பிதழ் கொடுத்தவர் என் நண்பர்..திருமணத்திற்கு போகவில்லையெனில் தப்பாய் எண்ணிவிடப் போகிறாரே என்று போனேன்.நண்பர் பெண்ணின் பெரியப்பா என்பதால்..மணமேடையில் மிகவும் சுறுசுறுப்பாக செயல் ஆற்றிக் கொண்டிருந்தார்.நான் எப்பொதும் சங்கோஜி..பேருந்தில் கூட சப்தம் போட்டு நடத்துநரிடம் பயணச்சீட்டு வாங்க மாட்டேன்.நடத்துநருக்கு நான் இரண்டுமுறை கேட்டால் தான் காதில் விழும்..அந்த அளவிற்கு மென்மையாகப் பேசக்கூடியவன்.

கல்யாண வீட்டில் யாரையும் தெரியாததால்..ஒரு ஓரத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்தேன்.அங்கு ஒவ்வொருவரும்..அடுத்தவரிடம் பேசிக்கொண்டும்..சிரித்துக் கொண்டும் இருந்தனர். எனக்கு உள்ளூர பயம்..யாராவது வந்து..பையன் வீட்டிற்கு சொந்தமா..பெண் வீட்டு சொந்தமா என்று கேட்டு விடுவார்களோ என்று.

அந்த பயத்திலேயே..காஃபி கொண்டுவந்து கொடுத்துக் கொண்டிருந்தவரிடம் கூட காஃபி வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்..அப்படிப்பட்டவன் போய் டிஃபன் எங்கே சாப்பிடப் போகிறேன்.

நூறு ரூபாய் மொய் எழுதிவிட்டு..சாப்பிடப் போகலாம் என்று நினைத்தேன்.ஓட்டலில் சாப்பிட்டால் கூட நூறு ரூபாய் ஆகாதா என்று மனம் கணக்குப் போட்டது.

தாலி கட்டி முடிந்ததும்..தைரியத்தை வரவழைத்துக் கொண்டு..மேடையில் ஏறி நண்பரைப் பார்த்து கை கொடுத்துவிட்டு மொய் கவரை திணித்தேன்.நண்பர் மணப்பெண்ணிடம் என் பெயரைக் கூறி அறிமுகப் படுத்தினார்.'ஆமாம்..இவனை எல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டு என்னவாகப் போகிறது'என்று அந்தப் பெண் மனதில் எண்ணியபடியே..அரை சென்டிமீட்டர் வாயை அகற்றி என்னைப் பார்த்து புன்முறுவல் செய்தாற் போல இருந்தது.

பின் நண்பர் கண்டிப்பாய் சாப்பிட்டுட்டுப் போங்க..என்றார்.

சரி என தலையாட்டிவிட்டு..தனியாக டைனிங் ஹால் போக தயங்கி..வேகமாக வெளியே வந்து செருப்பை மாட்டிக் கொண்டேன்.(நல்ல வேளை..செருப்பு காணாமல் போகவில்லை)

நேரே அருகில் இருந்த ஓட்டலுக்குப் போனேன்..சாப்பிட்டேன்..இன்று மதிய சாப்பாடு இரு நூறு ரூபாய் என்று மனதில் எண்ணிக் கொண்டேன்..

வீட்டில்..கல்யாணத்திற்கு போனீங்களே தாம்பூலப் பை எங்கே என்று கேட்டால் என்ன செய்வது..என்று தெரியவில்லை..கல்யாணப் பரிசு பைரவன் கதையாய் இருந்தாலும் பூமாலையை கடையில் வாங்கிக் கொண்டு போகலாம்..தாம்பூலப் பைக்கு எங்கே போவது..

Tuesday, January 26, 2010

கண் தானம் - 2

பிறந்த நாள் முதல்

கண்கள் பார்க்கின்றன

அவை படிக்கின்றன


அறிவாளி ஆக்குகின்றன



முட்டாளின் மூளைக்கும்

தெரிவிக்கின்றன செய்திகளை

படிக்காதவனுக்கும்

நிழற் படங்களைக்

காண வைக்கின்றன

கால வரையன்றி

காரண்டி வழங்கியுள்ளாள்

இயற்கை அன்னை

நயனங்களுக்கு

நமக்குப் பின்னரும் - அவை

நலமாய் வாழட்டுமே!

Monday, January 25, 2010

இளையராஜாவிற்கு பத்மபூஷன் கிடைக்க நானே காரணம்


அன்பு உடன்பிறப்பே

தமிழன் இளையராஜாவிற்கு பத்மபூஷண் விருது கிடைத்துள்ள செய்தியை நீ அறிந்திருப்பாய்.ஆனால் அதன் பிண்ணனி என்ன வென்று உனக்கு சொல்ல வேண்டியது என் கடமை என்பதால் இந்த மடலை எழுதிகின்றேன்.

என் உடல்நிலை இதற்கு இடம் கொடுக்கவில்லை..உண்மையைச் சொல்வதானால்..இன்று படுக்கையைவிட்டுக் கூட என்னால் எழுந்துக் கொள்ளமுடியவில்லை.அளவிற்கு அதிகமாக ஐந்து மணி நேரம் அதிகமாகவே உறங்கிவிட்டேன்.ஆனாலும்..இளையராஜா விருது விஷயத்தில் வரலாற்றுப் பிழை ஏற்பட்டுவிடக் கூடாதே என்றே..அதுவும் ஒரு தமிழனுக்கு விருது என்ற போது உடல்நிலையையும் பாராது இம்மடல் வரைந்தேன்.

என் கண்மணியே...அவருக்கு விருது வழங்கக்கோரி..32 கடிதங்கள் குடியரசுத் தலைவர்க்கு எழுதியுள்ளேன்..ஏன் பிரதமருக்குக் கூட 40 தந்திகள் அனுப்பியுள்ளேன்.என் வேண்டுகோளை..அன்னக்கிளி வந்த நாள் முதல் விடாது கேட்டு வருகிறேன்.என் மௌன அழுகையை புரிந்துக்கொண்டு..என் வேண்டுகோளைகுடியரசுத் தலைவர் ஏற்று..தம்பி இசைஞானி இளையராஜாவிற்கு இவ்வாண்டு பத்மபூஷண் விருதை வழங்கியுள்ளார்.

எதிர்க்கட்சியினர் அவர்களால் தான் இது நடந்தது என்று சொல்லக்கூடும்..ஆனால் உண்மையை நீயும்..நானும் மட்டுமே அறிவோம்.

எதிர்க்கட்சியினருக்கு ஒன்று சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்..என் தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் 22-1-10 அன்றைய இடுகையைப் பாருங்கள்..அதில்;இளையாராஜாவிற்கு விருது வழங்கப்படவில்லை என்ற என் ஆதங்கத்தைத் தெரிவித்திருந்தேன்..அது குடியரசுத் தலைவர் காதிற்கு எட்டியிருக்கிறது.

அதில் இப்படி நான் சொல்லியதை அறிந்த குடியரசுத் தலைவர் உடனே இளையராஜாவிற்கு இவ்வாண்டு விருதை வழங்கியுள்ளார்.

இத்துடன் சேர்த்து தம்பி ரஹ்மானிற்கும் இவ்விருது கிடைத்ததற்கு என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.ஆஸ்கார் தம்பிக்கு கிடைத்த போதுக் கூட நான் இவ்வளவு மகிழ்ச்சி அடையவில்லை.இது நமது சமத்துவ கொள்கையை உணர்த்துவதை உண்மை அறிந்தவர் உணர்வர்.

டிஸ்கி- நான் அரசியலில் இருந்தால் இப்படியெல்லாம் சொல்லியிருப்பேன்..அதற்கு வழியில்லாமல் போய் விட்டது.

Sunday, January 24, 2010

கண் தானம்





கடைசியாய் செயலிழக்கும்

உறுப்பு கண்தானாம்

ஏட்டில் படித்ததுண்டு

நிரந்தரமாய் கண்மூடிவிட்ட என்னை

இடுகாட்டிற்கு எடுத்துப் போகையில்

என் இழப்பு யார் யாரை

பாதித்துள்ளது என

பார்க்க விரும்புகையில்

கும்மிருட்டு

ஒன்றுமே தெரியவில்லை

இறந்ததும் கண்களை தானம் செய்தனராம்

யாரோ சொல்வது

திறனிழந்துக் கொண்டிருக்கும்

செவியில் மெலிதாகக் கேட்கிறது

Saturday, January 23, 2010

வாய் விட்டு சிரியுங்க..

1.நம்ம ராமு மனைவி எதிலும் மந்தமாதான் இருப்பா..
அவ பேர் என்ன
'சுலோ 'சனா

2.தினமும் மாலை 6 மணிக்கு என் வாய்க்கு வந்தபடி மனைவியை திட்டுவேன்
அதென்ன 6 மணி கணக்கு
அப்போதானே அவ ஷாப்பிங்க்னு வெளியே போவா..

3.சுதந்திரம் எப்ப கிடைச்சுது
2009 மார்ச் 10ஆம் தேதி
என்ன சொல்ற நீ
அன்னிக்குத்தான் என் மனைவி கோவத்தில பிறந்த வீட்டுக்கு போனா..

4.என் மனைவி கிட்ட எனக்கு பிடிச்சதே அவளோட பொய் சொல்லாத குணம்தான்..
இல்லையே...நேற்றுகூட என் மனைவிகிட்ட 'என் புருஷன் அழகுன்னு' சொன்னாளாமே

5.மகன்-அம்மா..சின்ன வயசில அப்பாவை காதலிச்சு கல்யாணம் பண்ணின்டியா?
அம்மா- ஆமாம்..அதுக்கென்ன இப்ப
மகன்- அப்பவும் அப்பாவுக்கு இதே முகம் தானே ..இதைப்போய்...

6.என் மனைவி வெயில்ல நான் போய் வந்ததும் அன்பா லைம் ஜூஸ் கொடுத்தா..
ஓகோ...காலைல ஒரு முழு லைம் சாக்கடைல கிடந்தது..அதைக்காணோமேன்னு பார்த்தேன்.

Friday, January 22, 2010

தர்மம்


அந்தணர்க்கு

ஆடை, தட்சணை

நுனிவாழை இலையில்

சோறு..பொரியல்..கூட்டு

வடை பாயாசம் என

தந்தையின் திதி

செய்து முடித்து

சாப்பிடுகையில்

அம்மா பசிக்குது

சாமி தருமம் - என

வாசலில் ஒலிக்கும் குரலை

விரட்டுகிறான்

இடது கையால்

போ..போ..என

Thursday, January 21, 2010

தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் (22-1-10)

திருப்பதி வெங்கடாசலபதிக்கு விலை மதிப்பற்ற 36 வகை தங்க, வைடூரிய,வைர ஆபரணங்கள் சொந்தமாக இருக்கிறதாம்..

2)வறியவர்,இயலாதவர்,முற்றிலும் ஆதரவு நாடுவோர் வடிவங்களில் நான் இறைவனைக் காண்கிறேன்.அவர்களுக்கு உதவுவதுதான், இறைவனால் படைக்கப் பட்ட ஒவ்வொரு உயிரிடத்திலும் அன்பு செலுத்துவது தான் நான் கடைபிடிக்கும் உண்மையான கடவுள் வழிபாடு ..என்கிறார் நடிகர் சிவகுமார்

3)கலைஞர் அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாகக் கூறியது பற்றிக் கேட்டபோது..அழகிரி ஒரு பேட்டியில் கூறியது 'கலைஞரின் பணிக்கு என்றைக்குமே ஓய்வு கொடுக்க முடியாது.எல்லாவற்றையும்
விட்டு அவர் விலக நினைத்தாலும் கூட காத்திருக்கும் கடமைகள் அவரை விலக விடாது' என்றுள்ளார்.(காத்திருக்கும் கடமைகள் என்று எதைச் சொல்கிறார்)

4)இசை வரலாற்றில் புரட்சி செய்து..சிம்பொனி,கீர்த்தனைகள் எழுதி..இசையமைப்பாளர்களின் இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு இதுவரை மத்திய அரசு எந்த விருதும் அளித்து கௌரவிக்கவில்லை.

5)முரண்பாடு..வேறுபாடு இரண்டிற்கும் ஒரே அர்த்தமா? என்றால் இல்லை என்று தெரிகிறது.
முரண்பாடு என்பது தண்ணீரும்..எண்ணெய்யும் கலந்தது மாதிரி சேராது..வேறுபாடு என்பது தண்ணீரும்..பாலும் போல..சேர்ந்து விடும்...இப்படி விளக்கம் சொன்னவர் கலைஞர்

6)நண்பன் எனப்படுபவன் யார்? நம்மிடம் எந்தவித எதிர்ப்பார்ப்பும் இன்றி பழகக்கூடியன் தான் நண்பன்

7)ஒரு ஜோக்

நடிகர்-தலைவரே! இன்று என்னோட படம் நூறாவது நாள் கொண்டாட்டம்..நீங்க அவசியம் விழாவிலே கலந்துக் கொள்ளணும்
தலைவர்- எந்த தியேட்டர்ல 100 நாள் ஓடியிருக்கு
நடிகர்-என் 'ஹோம்' தியேட்டர்ல

Wednesday, January 20, 2010

அடமானம்


வெளியே

வட்டிக்கு வாங்கி

வீடு கட்டாதே என்கிறது

வங்கி விளம்பரம்

வந்திடு என்னிடம்

நானே தருகிறேன்

தொலைபேசியில் கூப்பாடு

நாள் தோறும்

வந்தது வினை - என்

தலை ஆட்டுதலால்

வங்கிக் கடனில்

வாங்கிய வீடு மட்டும்

அடமானத்தில்

மூழ்கிடாதா!!!

Tuesday, January 19, 2010

கொஞ்சி விளையாடும் தமிழ் - 12

காதலன்..காதலி..ஒரு மாலை நேரம்....அருவி சலசலத்து ஓடும் மனத்திற்கு ரம்மியமான சூழலில் சந்திக்கிறார்கள்..காதலில் மூழ்கியிருக்கும் வேளையில் ..உணர்ச்சி வசப்பட்டு..உடலுறவு கொண்டு விடுகிறார்கள்.சாதாரணமாக காதலர்களுக்கு நிலவு சாட்சியாக அமைவதுண்டு.இங்கு அதுவும் இல்லை.

காதலன் பிரிந்து செல்கிறான்..ஆனால் அவளோ தவறு செய்து விட்டதாக நினைக்கிறாள்.நாளைக்கு ஏதேனும் விரும்பத்தகாதது நடந்தால் சாட்சி சொல்லக் கூட யாரும் இல்லை.இழப்பின் வெளிப்பாடை
குறிஞ்சி நிலப் பெண் பாடுவது போல அமைந்துள்ளது இப்பாடல்.

யாரும் இல்லைத் தானே கள்வன்
தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ
தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே
(கபிலர் - குறுந்தொகை 25)


தவறு நடந்து விட்டது..அப்போது யாரும் இல்லை அந்தத் திருடன் (காதலன்) மட்டும் தான் இருந்தான்.நாளை நான் இல்லை என அவன் பொய் உரைத்தால் நான் என்ன செய்வேன்.நாங்கள் கூடிய போது தினையின் தாளைப்போன்ற சிறிய கால்களுடன் ஆரல் மீனுக்காக ஓடும் நீரில் காத்திருந்த கொக்கு மட்டுமே இருந்தது என்கிறாள். கொக்கு மட்டுமே சாட்சியாம்.

இப்பாடல் குறுந்தொகையில் கபிலர் இயற்றிய பாடல்.

Monday, January 18, 2010

நான் அகங்காரம் கொண்டவனா?

நான் அகங்காரம் கொண்டவனா? என்பதைச் சொல்லுமுன்..அகங்காரம் என்றால் என்ன..என்று பார்ப்போம்..

அகங்காரம் நல்லதல்ல..அகங்காரம் இயற்கைத் தன்மையிலிருந்து மாறு பட்டது.எல்லோரிடமும் சகஜமாகப் பழகாமல்..நெருக்கமாக உணராமல்..மற்றவர்களிடமிருந்து நான் வித்தியாசமானவன் என்று எண்ணுவதே அகங்காரம்.

நான் மற்றவர்களைவிட உயர்ந்தவன்..அடுத்தவரும் நம்மில் ஒருவர் என்று உணராததே அகங்காரம்.

அகங்காரம் பிடித்தவன்..அன்பு,நட்பு எல்லாம் விரைவில் காணாமல் போய்விடும்.உயர்ந்தவர்..தாழ்ந்தவர் என எண்ணாது அனைவரையும் நம்மைப் போல எண்ணினாலே அகங்காரம் நம்மை விட்டு அகன்று விடும்..

நான் இந்த இடுகைக்கு இப்படிப்பட்ட தலைப்பு கொடுத்ததற்குக் காரணம்..

'கவிதை என்றால் இது கவிதை' என்ற என் இடுகைக்கு மணிகண்டனிடமிருந்து வந்த பின்னூட்டமே..அந்த பின்னூட்டம் வருமாறு

''மணிகண்டன் said

//என்ன இப்படி ஒரு தலைப்பு..கவிஞருக்கே உரிய அகங்காரமா...//"

கண்ணதாசனின் பாடல் வரிகள் ஒன்று..'தெய்வம் என்றால் அது தெய்வம்..வெறும் சிலை என்றால் அது சிலை தான்'

அதை நினைத்தே..'கவிதை என்றால் இது கவிதை..இல்லை என்றால் இது (கவிதை) இல்லை" என்று இத் தலைப்பைக் கொடுத்தேன்.

நான் எண்ணியபடியே பிறரும் எண்ணுவர் என்று எண்ணியது என் தவறே!!

Sunday, January 17, 2010

பாதாம் அல்வா...

மாத முதல் நாள்

கை நிறைய

காந்தி சிரிக்கிறார்

மாதக் கடைசி நாள்

வேக வேகமாக

வேர்த்து கொட்ட வந்து

கல்லூரிக் கட்டணம்

கட்டிய

அன்புத் தந்தை

அண்ணலில் தெரிகிறார்.


2)பழுத்த இலையாய் பெற்றோர்

மலர்ந்த பூவாய் இல்லாள்

மலரத் துடிக்கும் மொட்டாய் மகள்

தோட்டக்காரனாய் நான்


3)பாதாம் அல்வா

சாப்பிட்டபடியே

நெய் ரோஸ்ட்

போண்டா ஆர்டர் செய்கையில்

ஒரு காஃபி மட்டும்

என்கிறான் எதிராளி

என் தட்டை நோக்கியவாறு

வயிறில் லேசான வலி

Saturday, January 16, 2010

பொங்கலுக்கு நான் பார்த்த படம்- விமரிசனம்



ஒவ்வொருவரும் பொங்கல் வெளியீடு படங்களைப் பார்த்து...தங்கள் விமரிசனங்களை பதிவில் ஏற்றிக் கொண்டிருக்க..ஊரோடு என்றும் சேர்ந்து வாழும் நான் அப்படி செய்யாதது மன வருத்தத்தைக் கொடுக்க..நான் காணும் பொங்கலன்று கண்ட படத்தை விமரிசிக்கிறேன்..

விஜய் டி.வி.யில் சனிக்கிழமை 10 மணிக்கு பிரகாஷ் ராஜிற்கு தேசிய விருது வாங்கிக் கொடுத்த .'காஞ்சிவரம்' படம் ஒலி/ஒளி பரப்பானது.அப்படத்தை முன்னர் நான் பார்க்காததால்..இப்போது பார்க்க தீர்மானித்தேன்.இது என்ன தீர்மானிப்பது என்கிறீர்களா..பின்னே இல்லையா..இரண்டு மணி நேர படம்..நான்கு மணி நேரம் ஓடியது என்றால்...அதைப் பார்த்த நான் பொறுமைத் திலகம் அல்லவா?

நடுநடுவே ஐந்து நிமிடத்திற்கு ஒரு விளம்பர இடைவேளை..அடுத்து ஐந்து நிமிடத்திற்கு பிரகாஷ் ராஜ் பேச்சு..இப்படி நான்கு மணி நேரம் இடை இடையே படம் ஓடியது.

ஏழை நெசவாளிகள்..கம்யூனிசம் வருவதற்குமுன்..முதலாளித்துவத்தால் பட்ட துன்பங்களைப் படம் சொல்கிறது.பட்டு சேலை நெய்யும் ஒரு நெசவாளி..தன் திருமணத்திற்கு மனைவிக்கு பட்டு சேலை எடுக்க நினைக்க..அது முடியாது..தன் மகள் திருமணத்திற்குள் மகளுக்கு பட்டு சேலை எடுத்துவிடுவேன் என்கிறார்.அதற்காக தினசரி பட்டு நூலை சிறிது சிறிதாகத் திருடி..வீட்டில் மறைவான இடத்தில் தறி போட்டு நெய்கிறார்.இந்நிலையில் மனைவியின் மரணம் நேருகிறது.இதற்கிடையே..கம்யூனிச எழுத்தாளரை சந்திக்க..இவர் மனமும் அதை நாட..நெசவாளிகள் கோரிக்கைகளை எழுப்பச் சொல்லி தலைமை தாங்குகிறார்.ஒரு நாம் இவர் நூலைத் திருடிப் போகையில் மாட்டிக் கொண்டு சிறை செல்கிறார். அதனால் மகளுக்கு நடக்க இருந்த மணம் நின்று போகிறது.மகள் நோய் வாய்ப்பட ..பரோலில் வரும் அவர்..தன் கையால் மகளுக்கு விஷச் சோறு ஊட்டி..அவள் பிணத்தின் மீது..அதுவரை அரைகுறையாய் நெய்த பட்டை போர்த்துகிறார்.

பின்னர் நெசவாளிகளுக்கென Co op. society 1950ல் உருவானது என்ற கேப்ஷனுடன் முடிகிறது.

இப்படத்தில் பிரகாஷ்ராஜ் நடித்ததை விட அற்புதமாக பல படங்களில் நடித்துள்ளார்.சமயங்களில் முன்னர் கொடுக்க முடியாது விடுபட்டால்..பின்னர் ஒரு நாள் வேறு எதற்காவது கொடுப்பது வழக்கம்.அப்படித்தான் இதற்கும் என்றே தோன்றுகிறது.

Starring: Prakash Raj, Shreya reddy

Direction: Priyadarshan

Music: M. G. Sreekumar

Production: Shailendra Singh

Friday, January 15, 2010

தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் (15-1-10)

இலக்கியத்தில் மிகப் பெரிய விருதான சாகித்திய அகாடமி விருது பெற்றவர்களில் திருநெல்வேலியைச் சேர்ந்தவர்கள் அதிகம்.தோப்பில் முகமது மீரான்,தி.க.சி.,கி.ரா.,ரா.பி.சேதுப்பிள்ளை,வல்லிக்கண்ணன் ஆகியோர்.தாமிரபரணி தண்ணீர்...

2)தமிழின் சிறப்பு ஒன்று..பூ, மலர் இரண்டு தமிழ் வார்த்தைகளில் எதைச் சொல்லிப் பார்த்தாலும் சொல்வதற்காக வாய் திறக்கும் போது நம் உதடுகள் பூ மலர்வது போல மலர்ந்து விரியும். ப.,ம., இரு எழுத்துகளையும் உதடு மலராமல் சொல்ல முடியாது.

3)எங்கேயோ படித்தது...பெண்கள் சமுதாயத்தில் விதை நெல்லைப் போன்றவர்கள்.வரும் தலைமுறைகளை நன்றாக பயிர் செய்ய வேண்டியவர்கள்.

4)துபாயில் கலீபா டவர் என்ற கட்டிடம் சமீபத்தில் திறந்து வைக்கப்பட்டது.இதுதான் உயரமானக் கட்டிடமாக சொல்லப் படுகிறது.828 மீட்டர் (2717 அடிகள்) உயரமுள்ள இதை 21-9-04 கட்ட ஆரம்பித்து..1-10-09 அன்று முடித்தனராம்.12000 ஊழியர்கள் 22 மில்லியன் மணிநேரங்கள் வேலை செய்து கட்டி முடித்துள்ள இக்கட்டிடத்திற்காக 31400 மெட்ரிக் டன் இரும்பு தேவைப்பட்டதாம்.

5)மின்விசிறி ஒடத் தொடங்கிவிட்டால் அதிலுள்ள பிளவுகள் மறைந்து ஒரே சுழற்சி வட்டம் தான் தெரிகிறது.ஒரு செயலும் இன்றி உழைப்பு முடங்கிக் கிடக்கும் போது தான் உலகம் பெரிய துன்பங்களும்,மிகுந்த கவலைகளும் உள்ள இடமாகப் பிளவுப் பட்டுத் தெரிகிறது.உழைப்பு ஒரு நல்ல மருந்து.அதில் மனப்புண்களும்,கவலைகளும் ஆறுகின்றன.சோர்வும்,தளர்வும் ஒடுங்கி விடுகின்றன.

6)பண்டைத் தமிழர்களின் காலக் கணிப்பீட்டு முறை மிகவும் நுட்பமானது.வைகறை,காலை,நண்பகல்,எற்பாடு,மாலை,யாமம் என்று ஒரு நாளை ஆறு சிறு பொழுதுகளாக்கி..ஒரு நாளுக்கு அறுபது நாழிகைகள் எனப் பகுத்துக் கொண்டனர்.அதாவது அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிய அறுபது நாழிகைகள் எடுக்கின்றன.ஒரு நாழிகை 24 நிமிடங்கள்..60 நாழிகைகள் 1440 நிமிடங்கள் அதாவது 24 மணி நேரம் ..ஒரு நாள்.

7)சமீபத்தில் முடிவடைந்த 33ஆம் புத்தகக் காட்சியில் வாசகர்களின் அதிகக் கவனத்தைக் கவர்ந்த புத்தகங்களில் முதலிடத்தை..ரகோத்தமன் எழுதிய 'ராஜீவ் காந்தி கொலை வழக்கு' பெற்றுள்ளதாக..ஒரு பத்திரிகைக் குறிப்பு சொல்கிறது.

8)ஒரு ஜோக்

உதவி இயக்குநர்-(இயக்குநரிடம்) நம்ம பட பூஜை அன்னிக்கே..நம்ம கதை டிவிடி வேற லேங்குவேஜ்ல வெளிவந்து விட்டது
இயக்குநர்- இரைந்து பேசாதே..அதைத்தான் இப்ப நாம் காபி யடிச்சு தமிழ்ல எடுக்கிறோம்

Thursday, January 14, 2010

என்டர் தட்டா கவிதைகள்

என் ஆணவத்தை
அடக்குகிறது
உன் மௌனம்

2)உன் முகம்
நாணத்தால் சிவக்கையில்
பிறக்கின்றன ஆயிரம் கவிதைகள்

3)முதலும் முடிவும் தெரியா
சிக்கல் விழுந்த நூல்கண்டு
வாழ்க்கை

4) நிர்வாணமாய்
நின்று கொண்டிருக்கின்றன
இலையுதிர்கால மரங்கள்

5)நிமிடத்திற்கு நிமிடம்
உரு மாற்றிக்கொள்ளும்
பச்சோந்தி மேகங்கள்

6)முதியோர் இல்லத்தில் தாயிடம்
விடைபெறுகையில்
பார்த்துப் போ என்கிறாள்

7) தாங்க இயலா வேதனை
துக்கம்
உடல்வலி
மனவலி
அனைத்தும் போக்கும்
மந்திரச் சொல்
அம்மா.

Wednesday, January 13, 2010

வாய் விட்டு சிரியுங்க..

தயாரிப்பாளர்-பொங்கல் படங்களிலேயே உங்க படம் தான் பார்க்கிறார் போல இருக்கு
நடிகர்-அப்படியா
தயாரிப்பாளர்-ஆமாம்..மற்ற தியேட்டர்களில் எல்லாம் மக்கள் கூட்டம்தான் பார்க்க முடியுது.உங்க பட தியேட்டர்ல தான் யாருமில்லை

2)தலைவர் சுடுகாட்டில என்ன பண்றார்..
அவர் ஜலதோஷத்திற்கு ஆவி பிடிக்கச் சொன்னாராம் டாகடர்..அதைத்தேடிக்கிட்டு இருக்கார் பிடிக்க

3)தலைவர் போலீஸ் நிலயத்திற்கு எதற்குப் போனார்..
அவரது துணைவியின் கொடுமை தாங்கலையாம்

4)தயாரிப்பாளர்-ஒவ்வொருவர் தன் படம் ஓட போட்டியெல்லாம் வைக்கறாங்க..அது போல நாமும் ஒரு போட்டி வைக்கலாம்
இயக்குநர்-என்ன போட்டி வைக்கலாம்
தயாரிப்பாளர்-நம்ம படத்தின் கதை என்னன்னு கண்டுபிடிக்கறவங்களுக்கு பரிசு கொடுக்கலாம்

5)துறவி 1- நீங்க துறவியானதற்கு காரணம்
துறவி 2-.........நடிகரைப் போட்டு படமெடுத்தது தான் காரணம்..ஆமாம்..நீங்க..
துறவி1- என்னை உங்களுக்குத் தெரியல..அந்த படத்தை இயக்கியவன் நான்

6)நிருபர்-மக்களுக்கு உங்கள் பொங்கல் செய்தி..
தலைவர்-என்னை எதிர்ப்பவர்கள் நாசமாய் போவார்கள்..கெட்டு அலைவார்கள்..நாட்டை விட்டு ஓடுவார்கள் என்ற என் பொங்கல் வாழ்த்தை மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்

7)அந்த மருத்துவர்தான் தலைவரின் கரத்தை பலப்படுத்தியவர் என்கிறார்களே
ஆமாம்..தலைவரின் கை எலும்பு முறிந்த போது அவர்தான் சிகிச்சை செய்தாராம்.

இனிய பொங்கல் வாழ்த்துகள்

திணைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்

ஒருவர் தனக்கு செய்த சிறு உதவியையும் பெரிய உதவி ஒன்றாகக் கருதுவது தமிழனின் பண்பு.இது அவனுடனே பிறந்த குணம் எனலாம்.(அதனால்தான் அவனை எளிதாக ஒருவரால் ஏமாற்ற முடிகிறது என்பது வேறு விஷயம்)

தட்சிணாயனம் என்ற தனது தென்திசைப் பயணத்தை முடித்துக் கொண்டு சூரியன் வடதிசை நோக்கி தன் உத்தராயணப் பயணத்தை மேற்கொள்ளும் நாள் தை முதல் நாள்.

சாதி மதங்களை மறந்து சமத்துவம் வளர்க்கும் பண்டிகை பொங்கல்.பிற பண்டிகைகள் ஒரு குறிப்பிட்ட மதத்தையோ,இனத்தையோ மையமாகக் கொண்டு நடைபெறுவது.ஆனால் உழைப்பையும்,இயற்கையையும் மையமாக வைத்து வழிபடும் ஒரே பண்டிகை பொங்கல் மட்டுமே! தமிழர்கள் எங்கெங்கு உள்ளனரோ அங்கெல்லாம் பொங்கல் உண்டு.

உயிர் வாழ தேவையான உணவுப் பொருள் அரிசி.அது .. சூரியன், பூமி, மழை,காற்று ..ஆகிய இயற்கையின் கொடையால் கிடைக்கிறது.(கரும்பு,இஞ்சி,மஞ்சள்,காய்கறிகள்,பருப்பு ஆகிய பொங்கல் தேவைகளையும் இயற்கை அளிக்கிறது)

நம் வாழ்வில் வளம் அளிக்கும் அந்த இயற்கையை வழிபடும் தினமே பொங்கல்.

அரிசியை விளைவிக்கும் விவசாயிக்கு பெரிதும் உதவி..மனிதனுக்கு தேவையான அரிசியை தந்துவிட்டு...அதிலிருந்து கிடைக்கும் தவிட்டையும்..கடலை,எள் ஆகியவற்றிலிருந்து எண்ணெய்யை மனிதனுக்குக் கொடுத்து விட்டு..அவற்றிலிருந்து கிடைக்கும் சக்கையான தவிடு,புண்ணாக்கு ஆகியவற்றை தான் உண்ணும் தியாக உருவங்கள் மாடுகள்.அந்த மாடுகளையும்...மாட்டுப்பொங்கல் ..என பொங்கலுக்கு அடுத்த நாளை ஒதுக்கி நாம் நன்றிக் கடனைத் தெரிவிக்கிறோம்.

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்

Tuesday, January 12, 2010

பதிவர்களை வாங்கப் பார்க்கும் தயாரிப்பாளர்கள்

எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் உள்ளது போல தெரிகிறது ..சமீபத்தில் அதிகம் ஊடகங்களில் அடிப்பட்ட அந்த நிறுவனம்.

ஏற்கனவே..அது தயாரித்து..வெளியிடும் நிலையில் உள்ள படத்திற்கு பிரச்னை ஏற்பட்டது.

இந்நிலையில்..இணையத்தில்...வெளிவரும் விமரிசனங்களைக் கண்டு...திரை உலகினரிடையே சிறிது பயம் இருக்கிறது.இதை சில மாதங்களுக்கு முன் தமிழ் சினிமா என்ற இணைய இதழ் தன் தலையங்கம் மூலம் தெரிவித்திருந்தது.அகநாழிகை புத்தக வெளியீட்டு விழாவில் அஜயன் பாலா வும் இது குறித்து பேசினார்.

எங்கே..தன் படத்தையும்..இணையம் விமரிசனத்தில் கிழித்துவிடப் போகிறதே..என்ற பயம் வந்து விட்டது போல இருக்கிறது போலும்..அல்லது நம்மிடமிருந்து எதையோ எதிர்ப்பார்க்கின்றனர்.

திடீரென நேற்று பலர் பதிவுகளில் அந்நிறுவனத்தின் பின்னூட்டம் ஒன்றை பார்க்க நேர்ந்தது..அதில் பிளாக் எழுதுபவர்களுக்கு நிறுவனம் பல வேறு வாய்ப்புகள் அளிக்கப் போவதாகவும்..பதிவுகளை அவர்கள் வலைப்பதிவில் பதிவு செய்துக் கொள்ளுமாறும் கோரப்பட்டிருந்தது.

உள்ளே சென்று பார்த்தால் ..இன்றைய டாப் 10 பிளாக்குகள்,மிகச் சிறந்த பதிவுக்கு அந்நிறுவன விருது,கலக்கல் கவிதைகள்,சினிமா, சிந்தனை என பல பிரிவுகள் இருந்தன.

உண்மையாக அந்நிறுவனம் பதிவர்களை ஊக்குவிக்க இம் முடிவை எடுத்திருந்தால் நம் பாராட்டுகள்..

ஆனால்..தனக்கென ஒரு நோக்கம் வைத்துக் கொண்டு..அதற்காக தற்காலிகமாக..இம் முடிவை எடுத்திருந்தால்...அவர்களுக்கு ஏமாற்றமே ஏற்படும்.

எது எப்படியோ..இணையத்தில் பதிவுகளின் வலிமை அறிந்து மகிழ்ச்சியும்..பதிவர்கள் இது கண்டு மேலும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

Monday, January 11, 2010

வாய் விட்டு சிரியுங்க...

1)நோயாளி- (மருத்துவரிடம்) டாக்டர் சளி அதிகமாய் இருக்கு..உடனே கரைக்கணும்
மருத்துவர்-முதல்ல ஒரு ஆபரேஷன் பண்ணிடறேன்..அப்புறம் உங்க உறவு..கரைக்கறது..எரிக்கிறது எல்லாம் தீர்மானிக்கட்டும்.

2)நீதிபதி-துணிக்கடையில நுழைந்து ஒரு லட்சம் மதிப்புள்ள பொருள்களை திருடினதை ஒப்புக்கொள்கிறாயா
குற்றவாளி-75000 மதிப்பு பொருள் தாங்க..கடையில் 25 சதவிகிதம் தள்ளுபடி அறிவிச்சிருக்காங்களே

3)தலைவர் கிரிக்கெட் மேட்சுன்னா விட மாட்டார்..கண்டிப்பா போயிடுவார்..
கிரிக்கெட் மேல அவ்வளவு பற்றா
சேச்சே..சியர்ஸ் கேர்ள்ஸ் ஆட்டத்திலதான் பற்று

4)தலைவருக்கு தமிழ் மேல பற்றுன்னு எப்படி சொல்ற
சிரிக்கும் போது கூட ஹி..ஹி..ன்னு சிரிக்காம கீ..கீ..ன்னுதான் சிரிக்கிறார்

5)என்னங்க..அடுத்த ஜென்மத்திலும் நீங்கதான் என் கணவராய் வருவீங்கன்னு ஜோசியக்காரன் சொன்னான்
அப்போ..எனக்கு திரும்பவும் நரகம் தானா

6)உன் கூடப் பொறந்தவங்க..எத்தனைப் பேர்..
ம்..மூணு சகோதரன்..நாலு சகோதரி..இல்லை இல்லை ம்ம்..
இதுக்குப் போய் இப்படி யோசிக்கறே
எங்கப்பா யோசிக்கலையே..அதுதான்..

Sunday, January 10, 2010

பிறப்பினால் அனைவரும் சமம்

அதிபுத்திசாலி அண்ணாசாமிக்கு சின்ன வயது முதலே பட்டங்கள் என்றால் பிடிக்கும்..ஆனால் பாவம் அவருடைய அப்பா காத்தாடிக் கூட வாங்கிக் கொடுக்கவில்லை.

சரி..படித்து ஒரு பட்டம் வாங்கலாம் என்றாலோ படிப்பே ஏறவில்லை..பள்ளிக் கல்வி முடித்ததே..பெரிய காரியம்.

இப்படி பட்டங்கள் எதும்தான் வாங்க முடியவில்லை..தன்னை யாரேனும் பாராட்டி பேசட்டுமே என்ற ஆவல் ஏற்பட்டது.அதற்காகவே தனக்குத்தானே சில திட்டங்களை அறிவித்து..தனக்கு வேண்டியவர்களை அழைத்து..அந்த திட்டங்களைப் பாராட்டி..தந்தையே..தலைவனே என்றெல்லாம் அவர்கள் மூலம் பட்டங்களை வாங்கினார்.

உதாரணத்திற்கு..தனது மகனுக்கு ஒரு வேலை வாங்கிக் கொடுத்து விட்டு..ஒரு பாராட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்து..அதில் தன் நண்பர்கள் மூலம்..'தனயனின் தந்தை' என்ற பட்டம் பெற்றார்.

பின்..தனது அடுத்த மகனுக்கு..தனது நிர்வாகத்திலேயே..தனது துணையாக நியமித்து விட்டு..'துணை துணை கொண்டான்' பட்டம் பெற்றார்.

இப்படி..தனக்கும்..தன் குடும்பத்தினருக்கும்..அவ்வப்போது செய்யும் காரியங்களுக்கு..பொதுவான பட்டங்கள் பெறுவதை வாடிக்கை ஆக்கிக் கொண்டார்.

ஆனால்..நீண்ட நாட்களாக ..எந்த பட்டமும் பெறவில்லை என்ற ஆதங்கம் ஏற்பட..என்ன செய்வது என யோசித்தார்..

உடன் ஒரு ஐடியா வர..'இனி யாரும் என்னை பாராட்ட வேண்டாம்..யாரும் எனக்கு பட்டங்கள் ஏதும் தர வேண்டாம்' என்று தன் குடும்பத்தினர்..சுற்றம் ஆகியவர்களிடம் சொல்ல..அந்த ஐடியா வொர்க் அவுட் ஆகி விட்டது..'பட்டங்களுக்கு ஆசைப்படா குடும்பத் தலைவன்' பட்டத்தை குடும்பத்தினர் தரப்போகிறார்களாம்.

பிறப்பினால் அனைவரும் சமம்..பட்டங்களே ஒருவனை முன்னுக்கு கொண்டுவருகிறது என்று அவர் வாழ்க்கை அனைவருக்கும் தெரிவிப்பதாக அண்ணாசாமியின் மகள் தெரிவித்தார்.

Saturday, January 9, 2010

ஜக்கு பாய் சி.டி.யும்., படத் தயாரிப்பாளர்களும்..

சரத்குமார் நடிக்கும் ஜக்குபாய் படத்திற்கான சி.டி., படம் வெளியாகும் முன்னரே வந்தது..திரைப்படத்துறையையே ஒரு கலக்கு கலக்கிவிட்டது.கமல்,ரஜினி என ஆளாளுக்கு மனதில் தோன்றியதை பேசிவிட்டார்கள்.முதல்வரையும் சந்தித்தனர் திரையுலகத்தினர்.முதல்வரிடம் பெட்டிசன் கொடுக்கப்பட்டது.இது சம்பந்தமாக சிலர் கைதும் செய்யப்பட்டுள்ளனர்.

படம் வெளியாகப் போகிறது.15 கோடி முதலீடு என ராதிகா கண்ணீர்..எல்லாம் சரி..ஆனால் படத்தை இவ்வளவு நாள் டிஸ்ட்ரிபியூட்டருக்கு விற்றிருப்பார்களே..அவர்கள் தரப்பிலிருந்து ஏன் ஏதும் எதிர்க்குரல் எழும்பவில்லை.

தமிழகத்தில் 32 மாவட்டங்கள்..ஓவர்சீஸ் வெளியிடு,டிவி.டி.ரைட்ஸ்,ஆடியோ வெளியீடு, சேனல் ரைட்ஸ் இப்படி வியாபரம் இருக்கும் போது 15 கோடியை எளிதில் திரட்டிவிடலாமே! மேலும் இப்போதெல்லாம்..பட வெளிவந்து தோல்வியடைந்தால் என்ன செய்வது..என..அதிகத் தியேட்டர்களில்,அதிகக் காட்சிகள் என சில நாளிலேயே தோல்வி அடைய வேண்டிய படத்தையும்..வசூல் சாதனை என ஏற்படுத்தி விடுகிறார்களே..அப்படியெல்லாம் இருக்கும் போது 15 கோடி ஜுஜுபி ஆயிற்றே.

நம் சந்தேகம்..சொல்லப்பட்டுள்ள தொகை கணக்கில் காட்டும் தொகையாக மட்டுமே இருக்கக்கூடும்..மேலும் கறுப்புபணம் கணக்கில் சொல்லப்பட்டிருக்காது.

படத்தயாரிப்பு ராடன் ..மேலும் ராடன் ராதிகாவிற்கு மட்டுமே சொந்தமானதில்லை..பொதுத்துறை நிறுவனம் அது..ஆகவே அது மக்கள் பணம்.

படம் வெளிவரும் நேரம்..பிரச்னை பூதாகாரமாக்கப்பட்டு காட்டப்பட்டுள்ளது.

இதன் உள்நோக்கம் அறிந்துதான் ரஜினியும்..படத்தை உடன் வெளியிடுங்கள்..நல்ல பப்ளிசிட்டி கிடைத்திருக்கிறது என்றாரோ!

Friday, January 8, 2010

தீக்குள் விரல்..


வாழ்த்துச் சொல்லி

பூங்கொத்து கொடுக்கையில்

விரல்கள் தீண்டின

பூவினும் மெல்லிய

மலர் ஒன்றை


2) உனக்கு என்ன வேண்டும்

என்றேன்

கூலிங் கிளாஸ் என்றாய்

ஏறிட்ட என்னிடம்

என்னை நீ பார்க்கையில்

நீ அறியாது

உன்னை நான் பார்க்கலாமே

என்றன உன் கண்கள்


3)பிரியும் நாள்

கண்களின் நீர் துடைத்த

கைக்குட்டையை யாசித்தேன்

வரும் நாட்களில்

என் கண்ணீர் துடைக்க


4)தினமும் ஒருமுறை

உன்னை தழுவிட

அனுமதித்தாய்

அப்போது உணரவில்லை

சாவையும் ஒருநாள்

தழுவிட வேண்டுமென

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்(8-1-10)

சிவப்பு மிளகாய் சாப்பாட்டில் சேர்க்க பலரும் பயப்படுகிறார்கள்.ஆனால் அளவோடு சிவப்பு மிளகாய் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி,தொற்று நோய் எதிர்ப்பு,வைரஸ் எதிர்ப்பு என பல வகைகளில் பயன் விளைவிப்பதாக மருத்துவ ரீதியாக நிரூபணம் ஆகியுள்ளது.

2)பெண்ணின் சினைப்பையில் காணப்படுவது X குரோமோசோம்கள்..ஆணின் விந்தில் X மற்றும் Y குரோமோசோம்கள் காணப்படுகின்றன.ஆணிடமிருந்து X குரோமோசோம்கள் பெண்ணின் சினைப்பையை அடையுமானால் மகளும் Y குரோமோசோம்கள் அடையுமானால் மகனும் பிறக்கின்றனர்.இது தெரிந்தும்..சமுதாயத்தில் பெண் பிறந்தால் பெண்ணையே குற்றம் சொல்வது நீடித்துத்தான் வருகிறது.

3) ஆதி சங்கரர்,சுபாஷ் சந்திர போஸ்,விவேகானந்தர்,பாரதியார்,கணித மேதை ராமானுஜம்,கல்கி,தேவன்,புதுமைப்பித்தன்,பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்,கண்ணதாசன்,ராஜிவ் காந்தி ஆகியோர் அனைவருமே முதுமையடையும் முன்னரே அமரர் ஆனவர்கள்.

4)குழந்தை அழுகின்றது என்கிறோம்.அது அழுதாலும் அதன் கண்களில் கண்ணீர் வருவதில்லை.சில மெகாசீரியல் நாயகிகளுக்கு கிளிசரின் போட்டாலே கண்ணீர் வரும்.இப்போது பிரச்னை அதுவல்ல.குழந்தை பிறந்து மூன்று மாதங்களுக்கு பின்னர்தான் கண்ணீர் உற்பத்தியாகிறது அதாவது tear ducts

5)நல்லவர்கள் வெகு சிலரே! தீயவர்களும் வெகு சிலரே!! பெரும்பாலானவர்கள் இவை இரண்டுக்கும் நடுவில்தான் இருக்கிறார்கள்.

6)ஒரு ஜோக்

என் மனைவி இன்னமும் பழசை நினைச்சே அழுதுகிட்டு இருக்கா
என்ன சொல்றீங்க
என்ன இருந்தாலும் கோலங்கள் அபிக்கு இந்த நிலை வந்திருக்கக்கூடாதுன்னு அழறா.

Thursday, January 7, 2010

வாய் விட்டு சிரியுங்க (பதிவர்கள் பற்றிய ஜோக்ஸ்)

1) கோவி ஏன் இன்னிக்கு சந்தோஷமாய் இருக்கார்
அவர் வலைப்பூப் பற்றி தலைவர் பேசியிருக்காராம்
என்னவென்று
தன் தோல்விக்கு 'காலம்' தான் பதில் சொல்லும்னு

2)நர்சிம் வீட்டில் இன்னிக்கு என்ன கூட்டமா இருக்கு
உறவினர்கள் வந்திருக்காங்களாம்
அவ்வளவு உறவா அவருக்கு
யாவரும் கேளிர் னு சொல்லி இருக்காரே

3)கையைக் கடிக்காம ஒரு தொழில் ஆரம்பிக்கணும் ..என்ன செய்யலாம்..
கேபிள் சங்கரைக் கேளுங்க..உங்களை படத் தயாரிப்பாளரா ஆக்கிடுவார்

4)நான் என் நண்பர் கிட்ட யாருக்கும் சொல்லாதேன்னு சொன்ன விஷயத்தை எல்லோருக்கும் தண்டோரா போட்டுட்டார்
யார் அந்த நண்பர்
மணிஜி தான்

5)எவ்வளவு கொடுமைகள் நடந்தாலும்..பார்த்துக்கிட்டு பொறுமையா..என்னத்த கொடுமை பண்ணி..ன்னு..டென்ஷனே இல்லாம இருக்காரே ..அவர் பெயர் என்ன..
வடகரை வேலன்

6)ஒகேனக்கல்ல பதிவர் சந்திப்பு வைக்கணும்னு அடம் பண்றாரே ..அந்த பதிவர்..யார் அவர்
பரிசல்

7)அனுஜன்யா மேல எல்லோருக்கும் கோபம்
ஏன்
இப்ப எல்லாம் எல்லோருக்கும் புரியற மாதிரி கவிதை எழுதறாராம்

Wednesday, January 6, 2010

பைத்தியங்கள்

1)கரையோரம் வாழ்பவன்

கரையேறத் தெரியாது

கரையோரம் ஒதுங்கியவனை

கரையேற்றி வைத்தான்

2)பொங்கலுக்குக் கொடுத்த

இலவச வேட்டி சேலை

விற்றக் காசில்

அடுப்பில் பொங்கல்பானை

ஏறியது

3)நான் சிரித்தேன்

நாங்கள் சிரித்தோம்

பார்த்தவர்கள் சிரிக்கவில்லை

பைத்தியக்காரர்கள்

சிரிக்கத் தெரிந்த நாங்கள்

மனநோயாளியாம்

புத்தகக் காட்சியில் நான் - 3

புத்தகக் காட்சிச் செல்வோருக்கு சில தகவல்கள்..

பச்சையப்பன் கல்லூரியை ஒட்டி..நடைபாதைக் கடைகளை தவறவிடாதீர்கள்.நீங்கள் அதிர்ஷ்டசாலியானால் சில அருமையான புத்தகங்கள் கிடைக்கக் கூடும்..அப்படி நான் வாங்கிய சில புத்தகங்கள்..

சாகித்திய அகாதமி விருது பெற்ற கு.அழகிரிசாமியின் அன்பளிப்பு என்ற சிறுகதை தொகுப்பு

மூன்றாவது கை..கிருஷ்ணாவின் மூன்று குறுநாவல்கள்..அமரர் ராஜிவ் காந்தி நினைவு பரிசுப் போட்டியில் பரிசு பெற்ற ஒரு நாவல்..அடுத்தது இலக்கியப்பீடம் பரிசு பெற்ற நாவல்..

க.நா.சுப்ரமண்யத்தின் பொய்த் தேவு என்னும் சிறுகதை தொகுப்பு

ஒவ்வொன்றும் பத்து ரூபாய்க்கு கிடைத்தது.

அடுத்து..நாட்டுடமை ஆக்கப்பட்ட பின் நா.பார்த்தசாரதி (நா.பா.,மணிவண்ணன்) யின் படைப்புகள் குறைந்த விலையில் ஸ்ரீ இந்து பப்ளிகேசன்ஸ் வெளியிட்டுள்ளது.பொன் விலங்கு..குறிஞ்சி மலர்,சமுதாய வீதி,மணிபல்லவம் போன்ற பொக்கிஷங்கள் குறைந்த விலைக்குக் கிடைக்கின்றன.உதாரணம்..குறிஞ்சி மலர் புத்தகம் தள்ளுபடி போக 72 ரூபாய்.

கண்ணதாசன் பதிப்பகம்..கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் ..பத்து பாகங்களையும் சேர்த்து..அழகான பைண்ட் செய்யப்பட்டு ஒரே புத்தகமாக வழங்கியுள்ளனர்..800 பக்கங்கள்..விலை 250/
தள்ளுபடி போக 225..கண்டிப்பாக நம் ஒவ்வொருவர் புத்தக ஷெல்ஃபில் இருக்க வேண்டிய புத்தகம்.

கிழக்கு பதிப்பகம் பத்ரி எப்படி ஷெர்லக்ஹோம்ஸ் தமிழாக்கம் செய்துள்ளாரோ அப்படி..அகாதா கிறிஸ்டியும்.ஜேம்ஸ் ஹேட்லி சேஷும் தமிழில் தென்படுகிறார்கள் கண்ணதாசன் பதிப்பகத்தில்.

நான் வாங்கிய மேலும் சில புத்தகங்களை அடுத்த வருட காட்சிக்குள் முடித்து விடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

புத்தகக் காட்சியில் நான் - 2

நான் தி.ஜானகிராமன் எழுத்தை விரும்பி படிப்பவன்.இரண்டு வருடங்களுக்கு முன் நண்பர் ஒருவர் என்னிடமிருந்து 'அம்மா வந்தாள்' புத்தகம் இரவல் வாங்கிச் சென்றார்.இரவல் கொடுத்துவிட்டால் நம்ம ஆட்களிடம் திரும்பி வருமா? மேலும் தமிழனைப் பொறுத்தவரை..இரவல் என்பதிலும் 'இ' இருப்பதால் இலவசம் என்று எண்ணிவிடுகிறார்கள் போலும்.

அந்த புத்தகம் போனதிலிருந்து..மீண்டும் அதை வாங்கிவிட வேண்டும் என எண்ணியிருந்தேன்.இந்த கண்காட்சியில் வாங்கியும் விட்டேன்.

வீட்டிற்கு வந்தது..அந்த புது புத்தக வாசனையுடன்..அந்த பழைய நாவலை ஒரே மூச்சில் படித்து முடித்தேன்..அடடா...என்ன ஒரு எழுத்து..என்ன ஒரு வர்ணனை..இப்படி என்ன..என்ன..என சொல்லிக் கொண்டே போகலாம்.

ஒரு சில இடங்கள்..

பூணூல் போடுவது குறித்து..

'எந்த பிராமணன் சந்தி பண்றான் இப்ப?ஆவணி அவிட்டமாம்..காட்டில வாசம் பண்றபோது வச்ச வழக்கம்..எல்லாம் இன்னும் ஒட்டிண்டு இருக்கு.பூணுலுக்கு அர்த்தம் ஏது?டவாலி போட்டிக்கறவனாவது அர்த்தத்தோட போட்டுக்கறான்- தான் பியூன்னு காமிச்சுக்கிறதுக்கு.நம்ம டவாலிக்கு ஏது அர்த்தம்.சந்தி கிடையாது, ஜபம் கிடையாது,வேதம் கிடையாது,சாஸ்திரம் கிடையாது.பூணுலையே அறுத்தெறியணும்.இதுக்கு என்ன ஆவணி அவிட்டம்? அப்புறம் தலை ஆவணி, கால் ஆவணி' என்று கல்லூரி ஆசிரியர் படபடக்கிறார்.

இன்னொரு இடம்

பெட்ரூம் விளக்கின் ஒளி அவள் இடக்கன்னத்தில் மஞ்சள் பூசினாற் போல் விழுந்து வலக் கன்னத்தைக் கரியாக்கியிருந்தது.காதில் பூரித்த வைரத்தோடு இடக்கன்னத்தின் மஞ்சளுக்கும் இறங்கித்தழைந்த கரு மயிருக்கும் மேல் லேசாக நீலத்தைத் தெளித்தது.

பொழுது நன்றாக இறங்கிவிட்டது.கடற்கரை மணல் முழுதும் நட்சத்திரங்களைப் போல மனிதர்கள் முளைத்துக் கிடந்தார்கள்.அப்பு எழுந்து அலையண்டை போனான்,ஈர மணல்..நண்டுகள் அவனைக் கண்டதும் அப்படி அப்படியே மணலுக்குள் புதைந்து ஒழிந்தன.முன்னும் பின்னும் நகர்ந்தது போதாதென்று பக்கவாட்டிலும் நகரும் அவற்றைப் பார்த்துத் தலையில் மிதிக்க வேண்டும் போல இருந்தது.வெளிச்சம் நரைத்துக் கொண்டே வருகிறது.

அந்த வெள்ளைப் பாதங்கள், மார்பை விம்மிக்கொண்டு நீர்த் தொட்டியைச் சுற்றி சுற்றி வரும் வெள்ளைப் புறாபோல் இருந்தன.பாதத்திற்கு மேல் குதிரை முகம்,பின் சதையெல்லாம் பிலுபிலுவென்று
மின்னுகிற மயிர்.பெண்களுக்கு பெரும்பாலும் இப்படி இருப்பதில்லை.

இப்படி பல இடங்கள்.இன்றும் படிக்க புதிதாய்..

இப்புத்தகத்தை படிக்காதவர்கள் கண்டிப்பாக படிக்கவும்.

கிடைக்குமிடம்

ஐந்திணைப் பதிப்பகம்
172 பக்கங்கள்..விலை ரூ.90/-(தள்ளுபடி போக 81)

Tuesday, January 5, 2010

விவாகரத்துகள் ஏன்?


சரிதா,ஊர்வசி,சுகன்யா,சொர்ணமால்யா,ரேவதி,பிரகாஷ்ராஜ்,பிரசாந்த்...ஒரே சினிமா நடிகர்கள் பட்டியலாய் இருக்கிறதே என்கிறீர்களா? எல்லாம் விவாகரத்து வாங்கிய..அல்லது கேட்டு வரிசையில் நிற்போர் பட்டியல்.இவர்கள் திரை நட்சத்திரங்களாய் இருப்பதால்..நமக்குத் தெரிகிறது..ஆனால் சாமான்யர்கள் எவ்வளவு பேர் குடும்ப வழக்கு மன்றங்களில் விவாகரத்து வேண்டி காத்திருக்கிறார்கள் தெரியுமா?இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது.இதில் ஆச்சரியம் என்னவெனில் இவற்றுள் பெரும்பாலானவை பெற்றோர் பார்த்து நடத்திய திருமணங்கள்.

விவாகரத்து அதிகமாக என்ன காரணம் என்று பார்த்தோமாயின்..பெரும்பாலும் இரு பாலினரிடமுமே புரிதல் இல்லாமைதான்.ஆணாயினும்..பெண்ணாயினும்..மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுடன் மணவாழ்வை தொடங்குகிறார்கள்.அந்த எதிர்ப்பார்ப்பில் சிறிதளவு குறைந்தாலும் ஏமாற்றமே ஏற்படுகிறது.நாளடைவில் அந்த ஏமாற்றமே ஒருவர் மீது ஒருவருக்கு வெறுப்பை ஏற்படுத்துகிறது.

சரியான புரிதலில்தான் வாழ்க்கை இன்பமயமாகிறது..அடுத்து விட்டுக்கொடுத்தல் இருக்க வேண்டும்.இது பெண்களுக்கு மட்டுமே இருக்க வேண்டும் என எண்ண வேண்டாம்..ஆண்களுக்கும் இருக்க வேண்டும்.ஆணாதிக்கம் கூடாது.நம்மை நம்பி வந்தவள் அவள்..அவளுக்கென ஒரு மனம் இருக்கிறது...அவள் உறவையெல்லாம் விட்டு..நம்முடன் ஏற்பட்ட உறவை பிரதானமாக்கி நம்முடன் வருகிறாள்..என்பதை எல்லாம் உணர்ந்து..அவளை நடத்த வேண்டும்..அவள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும்..பணம் மட்டுமே வாழ்வில் பிரதானமில்லை..பணம் சம்பாதிக்க வேண்டும்தான்..ஆனால் வாழ்வில் மகிழ்ச்சியில்லை எனில் எவ்வளவு சம்பாதித்து என்ன பயன்.ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தும் போதுதான் இல்லறம் நல்லறமாகிறது.

அதற்கு..நம் நேரத்தை குடும்பத்தைக் கவனிப்பதிலும் சற்று ஒதுக்க வேண்டும்..மனைவி,மக்களுடன் மாலை நேரத்தை சந்தோஷத்துடன் கழிக்க வேண்டும்.குடும்ப விவகாரங்களில் ஒருவரை ஒருவர் ஆலோசனைக் கேட்க வேண்டும்.எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத் தலைவர் ..எப்போது பார்த்தாலும் பணம்..பணம் ..என அலைபவர்..தனது இருபது வயது மகளுக்கு திருமணம் செய்து வீட்டை விட்டு அனுப்பிட வேண்டும் என்றார்..நான் அவரிடம்'அவளை நன்கு படிக்க வையுங்கள்.திருமணத்திற்கு அவசரம் இல்லை' என்றேன்..நண்பரோ பிடிவாதமாக இருந்தார்.அவர் மனைவியிடம் நான் பேசினேன்..அவர்'எனக்கும் என் மகள் படிக்க வேண்டும்..நல்ல வேலையில் சேர வேண்டும்..என்றெல்லாம் ஆசை இருக்கிறது..ஆனால் அவர் வார்த்தைக்கு மறு வார்த்தை நாங்கள் பேசக்கூடாது.அவர் நினைப்பதுதான் எங்க குடும்பத்தில் நடக்கும்' என்றார்.அந்த அம்மாளின் வாயிலிருந்து சாதாரணமாக அந்த வார்த்தைகள் வந்தாலும்..அதில் தோய்ந்திருந்த வேதனையை உணர்ந்தேன்.

ஆணின் துணையின்றி பெண்ணும்..பெண்ணின்றி ஆணும் வாழ்வது என்பது முடியாதது அல்ல.ஆனால் அது இயற்கைக்கு முரணானது.ஒன்று மட்டும் போதும் என்பதல்ல..இயற்கை தருவது எல்லாமே இரண்டு..இரண்டுதான்.

இன்பம்-துன்பம்,நன்மை-தீமை,பிறப்பு-இறப்பு,சிரிப்பு-அழுகை, இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

அதுபோல இயற்கையின் படைப்பு ஆண்-பெண்.இந்த இரண்டின் இணைப்பிலேயே ஒன்று உருவாகமுடியும்.கணவன் ,மனைவி என்பது வெறும் உடலின்பத்திற்கு மட்டுமல்ல..உடல் இன்பம் என்பது உடலில் தொடங்கி உடலிலேயே முடிந்து விடும்.

தூய்மையான அன்பு மட்டுமே இறுதிவரை துணை இருக்கும்.

அமைதியான குடும்ப வாழ்க்கை அற்புதமே!

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை

(நல்ல பண்புடைய மனைவி அமைந்த வாழ்க்கையில் எல்லாம் இருக்கும்.அப்படியொரு மனைவி அமையாத வாழ்க்கையில் எதுவுமே இருக்காது)

பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு

(நற்பண்பு பெற்றவனைக் கணவனாக பெற்றால், பெண்களுக்கு இல்வாழ்க்கையெனும் புதிய உலகம் பெருஞ்சிறப்பாக அமையும்)

Monday, January 4, 2010

புத்தகக் கண்காட்சியில் நான்

நேற்று கண்காட்சிக்கு சென்றேன். சில புத்தகங்களை வாங்கினேன். அவற்றுள் மணிவாசகர் பதிப்பகத்தில் நான் வாங்கிய ஒரு புத்தகம் பற்றி பதிவர்களுக்கு உடனே சொல்ல வேண்டும் என எண்ணியதால் இப்பதிவு.

புத்தகத்தின் பெயர்..உவமை உலா

இதன் ஆசிரியர் முனைவர் பட்டத்திற்காக தேர்ந்தெடுத்த தலைப்பு 'புதுக்கவிதையில் உவமைகள்'..புதுக்கவிதை பற்றி மட்டுமல்ல..பல கவிஞர்கள்/புலவர்கள் கையாண்ட உவமைகள் பற்றி படிக்கப் படிக்க திகட்டாத அளவு கொடுத்திருக்கிறார்.

பாவேந்தர் தன் படைப்புகளில் 900 உவமைகளுக்கு மேல் கையாண்டுள்ளாராம்.புத்தகத்தில் பாரதி முதல் மேத்தா வரை கையாண்டுள்ள பல உவமைகளை எழுதியுள்ளார் ஆசிரியர்.

நா.காமராசனின் உவமை நம்மை வியக்க வைக்கிறது.

கலை அம்சமுள்ள
பிரச்சாரம் போல
காதில் விழும் அருவி ஓசை

என்கிறார்..'பொருளாழத்தோடு, இயற்கையாக நல்லமுறையில் நடத்தப்படும் பிரச்சாரம் அருவு விழும் ஓசை போன்றதாம்.

கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகளிலிருந்து ஒரு உவமை..

வெளியே செல்லும் போதும்
நத்தையைப் போல
வீட்டையும்
சுமந்து கொண்டு தான்
செல்லுகிறீர்கள்

என வீடு என்ற கவிதையில் இப்படி மாறுபட்ட உவமையைக் கையாண்டுள்ளார்.

கவிஞர் வைரமுத்து உவமை ஒன்றை பாருங்கள்

காவிரி பாய்ந்து
அன்னம் விளையுமா?
இல்லை
காவிரி அன்னம் போல்
காணாமல் போகுமா?

இதில் முதல் அன்னம் நெல்லையும்..இரண்டாம் அன்னம் அன்னப் பறவையையும் குறிக்கும்.

புதுக்கவிதை உலகின் 'உவமைக் கவிஞர்' என அறியப்பட்டவர் ஆர்.எஸ்.மூர்த்தி..அவரின் உவமை ஒன்று..

'இருட்டைப் பிழிந்து
எடுத்து வைத்தது போல
படுத்திருந்தது ஆட்டுக்குட்டி
பாதையோரம்
காலைநேரம்'

இப்படி..இந்நூலாசிரியர் ..பல கவிஞர்கள் கையாண்டுள்ள உவமைகள் பற்றி(நூற்றுக்கும் மேல் இருக்கும்) கூறியுள்ளார்.இலக்கிய ஆர்வலர்களும்..தமிழின் பால் ஆர்வம் கொண்டோர் அனைவரும்..இந்நூலைக் கண்டிப்பாக படிக்க வேண்டும் ..அதனாலேயே..பாரதி,பாரதிதாசன் பற்றி எல்லாம் நான் எழுதவில்லை.

'உவமைப்போல ஆச்சரியம் உலகின் மிசை இல்லையடா' என்கிறார்..புத்தகத்திற்கு அணிந்துரை வழங்கியுள்ல இரா.மோகன்.

புத்தக விவரம்-
பெயர் - உவமை உலா
ஆசிரியர்-செ.ரவிசங்கர்
கிடைக்குமிடம்-மணிவாசகர் பதிப்பக ஸ்டால்
புத்தகக் கண்காட்சி
192 பக்கங்கள் விலை ரூபாய் அறுபது மட்டுமே..(கண்காட்சியில் தள்ளுபடி போக 54 மட்டுமே

மழையால் அழியும் பயிர்

1)ஆயிரம் காலப்பயிர் என

ஆயிரம் யோசித்து

நூறு ஆயிரக் கணக்கில் கொடுத்து

பத்து சத்திரம் பார்த்து - சிறந்த

ஒன்றில் நாள்பார்த்து

விதைத்தது

வானம்பார்த்த பூமியாய்

விவாகரத்து மழையில்

அழிந்தது

2)நல்லதொரு

கவிதை எழுத

வெள்ளைத்தாளை எடுக்க

அதில் வந்து

அமர்ந்திட்டாய் ஒயிலாக

Sunday, January 3, 2010

வாய் விட்டு சிரியுங்க..

1)தலைவருக்கு தமிழ் பற்று அதிகமா போச்சு
எப்படி சொல்றே
மாணவர்கள் ஆங்கில பரீட்சையையும் தமிழில் எழுதினால் மதிப்பெண் அதிகம் போடப்படும் என்கிறாரே

2)நிருபர்-இந்த புத்தாண்டில் என்ன உறுதி மொழி எடுத்துள்ளீர்கள்
நடிகை-இந்த ஆண்டு முழுதும் யாரையும் டைவர்ஸ் பண்ணுவதில்லை என உறுதிமொழி எடுத்திருக்கிறேன்

3)எங்க தாத்தா பிழைக்கத் தெரிந்தவர்
எதை வைச்சு சொல்ற
என்ன உடம்புன்னாலும் டாக்டர் கிட்ட போகமாட்டார்

4)அந்த வக்கீல் சாட்சிகளை விசாரிக்கும் போது கிறுக்குத்தனமாக கேள்விகள் கேட்பார்
அப்போ அது கிறுக்கு விசாரணைன்னு சொல்லு

5)என்னங்க உங்க நண்பர் தினமும் நாம் சாப்பிடற நேரத்தில வந்து நம்ம கூட சாப்பிட உட்கார்ந்துடறார்
பாவம்..டாக்டர் அவரை உப்பு சப்பு இல்லாம சாப்பிடச் சொல்லியிருக்காறாம்

6)உடனடியா எனக்கு 10 கரப்பான் பூச்சி 4 எலி கொஞ்சம் மூட்டைபூச்சி வேணும்
ஏன்
எங்க வீட்டு ஓனர் வீட்டை காலி பண்ணச்சொல்லிட்டார்..ஆனால் வீட்டை எப்படி எனக்கு தந்தாரோ..அதே போல திருப்பித்தரணும்னு சொல்லியிருக்கிறார்.

Saturday, January 2, 2010

இடைத்தேர்தலும் தமிழ்மண வாக்கெடுப்பும்


தமிழ்மணத்தில் சிறந்த 2009 பதிவுகளுக்கான தேர்வு நடந்துக் கொண்டிருக்கிறது.மொத்தம் 16 பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவிலும் பதிவர்களால் தெர்ந்தெடுக்கப்பட்ட முதல் பத்து பதிவுகள் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் தற்போது உள்ளது.

செய்திகள் பிரிவில் எனது இந்த இடுகையும் உள்ளது.முதலில் பத்திற்குள் ஒன்றாக இதைத் தேர்ந்தமைக்கு பதிவர்களுக்கு நன்றி.

இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் அனைவரும்..அதாவது பதிவர்..பதிவர் அல்லாதார் அனைவரும் வாக்களிக்கலாம்.ஆனால் அதற்குமுன் பயனர் பெயரை தமிழ்மணத்தில் ரிஜிஸ்டர் செய்துக் கொள்ள வேண்டும்.

எப்படி செய்தாலும்..எல்லாவற்றிலும் லூப்ஹோல் உண்டு.அதை நன்கு அறிந்து..அதை முறைகேடாக பயன்படுத்துவதில் வல்லவர் நாம்.இப்போதும்..நமக்கு நண்பர் வட்டம் பெரிதென்றால் அவர்களை தமிழ்மணத்தில் பயனர் என இணைத்து அவர்கள் வாக்குகளை நமக்குப் போடச் செய்யலாம்.அதனால் சிறந்த இடுகைகள் சிறந்தவையாக தேர்வு ஆகாமல் போகலாம்.இந்த கோணத்தில் ஆராய்ந்து தமிழ்மண நிர்வாகம் வேறு முறையில் தேர்வு நடத்தலாம்.

அதாவது..ஒவ்வொரு பிரிவிலும் உள்ள பதிவர்கள் தேர்ந்தெடுத்த சிறந்த இடுகைகள் எது..என தமிழ்மண நிர்வாகமே ஒரு குழு அமைத்து தேர்ந்தெடுக்கலாம்.அந்த நீதிபதிகள் தீர்ப்பே இறுதியானது.அதை விடுத்து..இப்போது அறிவித்துள்ள முறையில் தேர்ந்தெடுக்க வேண்டுமெனில்..இடைத்தேர்தல்களில் எப்படி பணபலம் வெற்றி பெறுகிறதோ..அப்படி..இத்தேர்விலும் நண்பர் பலமே வெற்றிபெறும்.

தமிழ்மணம் இந்தக் கோணத்தில் யோசிக்குமா?

Friday, January 1, 2010

இசைஞானி இதுவே

1)மின்வெட்டே இல்லா
வரிசை விளக்குகள்
விண்மீன்கள்

2)கண்கவர் சுழல்
இருப்பிடம் கட்ட
எங்கு பொறியியல் கற்றது
சிலந்தி

3)தன்னுயிர் ஈந்து
பெண்மானம் காக்கும்
பட்டுப்பூச்சி

4)சிம்பொனியும் அமைக்கவில்லை
திரையிசையும் தெரியாது
காலையில் கூவி அழைக்கும்
இசைஞானி குயில்

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (1-1-10)

அப்பாவோ,அம்மாவோ கட்டுப்பாடு என்ற பெயரில் குழந்தைகளை அடித்து நொறுக்கக்கூடாது.பெற்றோரை எதிர்த்து பதில் தாக்குதல் நடத்த முடியாத குழந்தைகளின் மனதில் ஆற்றாமை இருந்துக் கொண்டிருக்கும்.அதனாலேயே பெற்றோரை பழிவாங்குவதாக எண்ணிக்கொண்டு..அக்குழந்தைகள் பெற்றோர் விரும்பாத செயல்களை செய்துக் கொண்டிருப்பார்கள்.

2)சமையல் என்பது விறகு அடுப்பிலும் சமைக்கலாம்.கெரசின் அடுப்பிலும் சமைக்கலாம்.ஆனால் அடுப்பும்,அரிசி,பருப்பு,காய்கறிகள்,சமையல் பாத்திரம் மட்டும் இருந்தால் சமையல் தயாராகாது.அதற்கு நெருப்பு வேண்டும்.அதாவது நெருப்பு என்னும் ஈர்ப்பு இருந்தால் மட்டுமே சமைக்க முடியும்.அதுபோல ஆன்மீகத்தை அடைய பக்தர்களுக்கு ஒரு ஈர்ப்பு தேவைப்படுகிரது.அதுவே கோவில்கள்.

3)உன்னிடம் என்ன திறமை இருக்கிறது என்பதை நீ அறிவாயா? ஒன்றுமே இல்லை என்று சொல்லாதே..ஒவ்வொருவரிடமும் ஒரு திறமை இருக்கும்.அதைக் கண்டுபிடித்து அதில் உன் அறிவை,உழைப்பை செலுத்து.வாழ்வில் நீ ஜொலிக்கலாம்.புதைந்து கிடக்கும் கரித்துண்டுக்கு ..வருங்காலத்தில் வைரமாக ஜொலிப்போம் எனத் தெரிவதில்லை.

4)A son is a son until he gets married but a daughter is a daughter till you die

5)அரசு அதிகாரிகளும்,அமைச்சர்களும் அரசின் பொருளாதார நிலை, சிக்கன நடவடிக்கை ஆகியவற்றை முன்னிட்டு ஸ்டார் ஓட்டல்களில் தங்குவதும்..பிளேனில் எக்ஸிக்யூடிவ் வகுப்பில் வரவும் மையஅரசு தடை சொன்னது சில மாதங்களுக்கு முன்..இப்போது எம்.பி.க்கள் தங்கள் உறவினர்,நண்பர்கள் ஆகியோரை பிளேனில் அழைத்து வரலாம் என்று அறிவித்துள்ளது.ஏனோ துக்ளக் ஞாபகம் வருகிறது.

6)பூமியில் எவ்வளவு பெரியவனாய் இருந்தாலும்..கடலுக்குள் விழுந்து விட்டால்..அதில் உள்ள மீனுக்கு சிறியவனாகி விடுவான்.

7)வீட்டில் மருமகள் சரியாக சாப்பாடு போடுவதில்லை என அவள் மீது குற்றம் சொல்லி முதியோர் இல்லத்திற்கு வரும் மாமியார்கள்..வரிசையில் நின்று..தட்டை ஏந்தித்தான் சாப்பாடு வாங்கி உண்ணமுடிகிறது.

8)ஒரு ஜோக்

அதி புத்திசாலி அண்ணாசாமி B.Ed., படித்தார்.அதில் பாசானதும் தன் வீட்டிற்கு ஒரு தந்தி அனுப்பினார்.தந்தி குமாஸ்தா B.Ed., என்பதில் Bக்கு அடுத்து புள்ளி இருந்தால் அதிகமாக ஒரு வரிக்கான செலவு ஆகும் என்றார்.உடன் அண்ணாசாமி வீண் செலவு வேண்டாம் என இப்படி தந்தி கொடுத்தார்.
successful in BED