Thursday, February 19, 2009

வக்கீல்கள்-போலீஸ் மோதலுக்கு காரணம் என்ன?

ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி மீது முட்டை வீசியதாக கூறப்படும் வக்கீல் ஒருவரை போலீஸார் கைது செய்ததே வக்கீல்கள் பெரும் ஆத்திரத்துடன் இன்று கலவரத்தில் ஈடுபட முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. மேலும் ரஜினிகாந்த் என்ற வக்கீல் கொடுத்த புகாரின் பேரில் சுவாமியைக் கைது செய்ய வேண்டும் என்று கோரியும் வக்கீல்கள் போராட்டத்தில் குதித்ததே வன்முறையாக மாறியது.

ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி மீது முட்டை வீசிய வழக்கறிஞர்களில் ஒருவரான இம்மானுவேல் என்பவரை போலீஸார் நேற்று இரவு கைது செய்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக 20 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் இம்மானுவேல் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றவர்களைத் தேடி வருவதாகவும் போலீஸார் தெரிவித்திருந்தனர்.

இதுதான் பிரச்சினைக்கு முக்கிய காரணமாகி விட்டது. இம்மானுவேலைக் கைது செய்த போலீஸார் சுவாமியைக் கைது செய்ய வேண்டும் என்று கோரி வழக்கறிஞர் ரஜினிகாந்த் என்பவர் கொடுத்த புகாரை ஏற்று ஏன் சுவாமியைக் கைது செய்யவில்லை என்று கோரித்தான் இன்று வக்கீல்கள் போராட்டத்தில் குதித்தனர்.

இந்த போராட்டம் பெரும் வன்முறையாக மாறிப் போனது.

போலீஸார் திட்டமிட்டு தாக்கினர் - வக்கீல்கள்:

இதற்கிடையே போலீஸார் திட்டமிட்டு தங்களைத் வெறித்தனமாக தாக்கியதாகவும், வக்கீல்கள் என்ற போர்வையில் ரவுடிகளை அழைத்து வந்து இந்த கலவரத்தை அரங்கேற்றினர் என்றும் உயர்நீதிமன்ற வக்கீல்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து வக்கீல்கள் தரப்பில் கூறுகையில், அமைதியான முறையில்தான் நாங்கள் போராட்டம் நடத்தினோம். வழக்கறிஞர் ரஜினிகாந்த் கொடுத்த புகாரின் பேரில் சுப்பிரமணியம் சுவாமியைக் கைது செய்ய வேண்டும் என்று நாங்கள் கோரினோம்.

ஆனால், திடீரென ஒரு கும்பல், அவர்கள் வக்கீல்கள் அல்ல, தாக்குதலில் இறங்கினர். முதலில் கல்வீசித் தாக்கினர். பின்னர் வன்முறையில் இறங்கினர். இதையடுத்து அதற்காகவே காத்திருந்தது போல போலீஸார் வெறித்தனமாக வக்கீல்களைத் துரத்தி துரத்தி தாக்கினர்.

இதில் பல வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள் படுகாயமடைந்துள்ளனர். பலருக்கு மண்டை உடைந்துள்ளது.

போலீஸார் வேண்டும் என்றே இந்த வன்முறையை அரங்கேற்றியுள்ளனர். வக்கீல்களின் பெயரைக் கெடுக்கும் நோக்கத்துடன் இதைச் செய்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

போலீஸார் வெளியேற்றம்:

இதற்கிடையே உயர்நீதிமன்ற வளாகத்தில் குவிக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார், அதிரடிப்படையினர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

டிஜிபி கே.பி. ஜெயின் உத்தரவின் பேரில் அவர்கள் வெளியேறினர்.

நன்றி தட்ஸ் தமிழ்

1 comment:

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைப்பூக்கள்‌/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்